“நடுரோட்டில் நடந்த இரட்டைக் கொலை!” - ஆண், பெண்ணை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிய கும்பல்.. கள்ளக்காதல் விவகாரமா?

பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், இருவரையும் வழிமறித்து சாலையிலேயே சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது...
thirupattur double murder
thirupattur double murder
Published on: 
Updated on: 
1 min read

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, தோரணம்பதி அருகே பட்டப்பகலில் ஆண், பெண் இருவர் சாலையில் வைத்தே சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் காரில் தோரணம்பதி அருகே உள்ள தனியார் பிளாட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், இருவரையும் வழிமறித்து சாலையிலேயே சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட ஆண், திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது. அவருடன் வந்த பெண் யார் என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இதையடுத்து, இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம், இருவருக்கும் இடையிலான தொடர்பு, கொலைக்கான காரணம் மற்றும் இதில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு அல்லது கள்ளக்காதல் தொடர்பான விவகாரத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும், இதுவரை கொலைக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை. பட்டப்பகலில் சாலையில் வைத்தே இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.