ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே அமராவதி நகரைச் சேர்ந்தவர் 29 வயதுடைய மணிகண்டன். தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. முதல் மனைவியான 26 வயதுடைய தஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிகண்டன், அவருடன் கடந்த 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இதனிடையே, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த 25 வயதுடைய மலர் என்ற பெண்ணை மணிகண்டன் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இரண்டு மனைவிகளின் வீடுகளுக்கும் மாறி மாறி சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இரண்டாவது மனைவி மலருடன் காளிங்கராயன்பாளையம் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது பவானியில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படும் RKM என்ற தனியார் பேருந்தில் மணிகண்டன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். பவானி அருகே குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த 19 வயதான காவியா, ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். காவியா தினமும் மணிகண்டன் ஓட்டும் பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டன் மற்றும் காவியா இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியதாக தெரிகிறது. மணிகண்டனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்று மனைவிகள் இருப்பது தெரிந்தும் மாணவி அவரை காதலித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல கடந்த இரண்டு தினங்களுக்கு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற காவியா, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், தங்களது மகளை காணவில்லை என பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மணிகண்டனும் காவியாவும் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.மணிகண்டனும் கல்லூரி மாணவியும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட தகவல் அவரது முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனின் இரு மனைவிகளும், அவர்களது குடும்பத்தினரும் பவானி காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்களும் அங்கு திரண்டதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
தொடர்ந்து மணிகண்டன், கல்லூரி மாணவி காவியா, மணிகண்டனின் முதல் மனைவி தஸ்மின் மற்றும் இரண்டாவது மனைவி மலர் ஆகியோரிடம் பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி காவியா மணிகண்டனுடன் சென்றதற்கான காரணம், இருவருக்கும் இடையேயான பழக்கம் மற்றும் காதல் தொடர்பான தகவல்கள் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
மணிகண்டன் இதற்கு முன்பு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பொக்லைன் இயந்திர ஆபரேட்டர், அரசுப் பேருந்து தற்காலிக ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் அவர், இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்து அதனை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து, முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த மணிகண்டன் தற்போது கல்லூரி மாணவியுடன் பழகி வந்ததாக கூறப்படும் சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்