மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில் டொம்பர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கவிதா (27). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான காளியப்பன் என்பவருடன் திருமணமாகி பத்து வயது ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கவிதாவுக்கும் அவரது கணவர் காளியப்பனுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கவிதா கணவருடன் கோபித்துக் கொண்டு தனது இரு குழந்தைகளுடன் கவிதா அவரது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். அவரது கணவரும் மனஅழுத்ததால் வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வந்த தன்னை கணவன் பார்க்க வராததால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.
மன விரக்தியில் இருந்த கவிதா 23ம் தேதி மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரண்டாவது குழந்தை சஞ்சிதாவை வீட்டின் அருகே இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் தூக்கி எரிந்து கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு வேகமாக வீட்டிற்குள் வந்து கதவை தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மூத்த மகன் அவரது தாத்தாவுடன் பஜாருக்கு சென்றதால் தப்பித்ததாக பொதுமக்களால் கூறப்படுகிறது. இதனையடுத்து, வெகு நேரமாக வீட்டின் கதவு பூட்டப்பட்டுள்ளதை அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவினை யாரும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்க்கும்போது கவிதா தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு அங்கிருந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த கவிதாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது மூன்று வயது பெண் குழந்தை காணாமல் போனது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை எங்கும் கிடைக்காததால் அருகில் இருந்த கிணற்றுக்கு சென்று கிணற்றுக்குள் இறக்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்தவர்களை தேடச் சொன்னபோது குழந்தை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. மேலும், கள்ளிக்குடி போலீசார் தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு இறந்த கவிதா மற்றும் அவரது மகள் சஞ்சிதாவின் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மூன்று வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.