தூத்துக்குடி முத்தையாபுரம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் 72 வயதுடைய புலவர் கணேசன். இவர் பிரபல சினிமா மற்றும் டிவி சீரியல் நடிகை தீபாவின் தந்தை ஆவார். இவர் தூத்துக்குடி மாநகர 57 வது வார்டு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் முத்தையாபுரம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தாவாகவும் பணியாற்றி வருகிறார். மேலும் கோவில் அருகே பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் முன்னாள் கோவில் தர்மகர்த்தாவாக இருந்த நபர் மோசடி செய்ததாக சொல்லப்படும் நிலையில் அவருக்கு ஆதரவாக கமிட்டியில் இருந்தவர்களை கணேசன் கமிட்டியில் இருந்து நீக்கியுள்ளார்.
இதனால் முன்னாள் தர்மகர்த்தவும் அவருக்கு ஆதரவாக இருந்தவர்களும் கணேசனை தர்மகர்த்தா பணிகளை மேற்கொள்ள விடாமல் இடையூறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக காமராஜர் சிலை அமைக்கும் பணிகளிலும் அவர்கள் இடையூறு செய்து வந்த நிலையில் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று சிலை அமைக்கும் பணியை கணேசன் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் இன்று முத்தையாபுரம் பஜாரில் உள்ள டீக்கடை முன்பாக புலவர் கணேசன் நின்று கொண்டிருந்தபோது, திடீரென்று அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலை சேர்ந்த வாலிபர்கள் கையில் அரிவாளுடன் பாய்ந்து வந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் தடுக்கும் வகையில் எச்சரிக்கை விடுத்து சத்தம் எழுப்பி ஓடி வந்ததைக் கண்டதும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். உடலில் தலை உட்பட பல்வேறு இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியை சேர்ந்த முத்துராஜ், கார்த்தி, இசக்கி, உள்ளிட்ட 3 பேரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வரும் நிலையில் இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்