திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அடுத்த மூலக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவரர்கள் 60 வயது சிவன் மற்றும் 57 வயது வைரம்மாள் தம்பதியினர். இவர்கள் அதே பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள் இருந்த நிலையில் மூத்த மகள் திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இரண்டாவது மகளான 22 வயதுடைய அமுதாவுக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு மூத்த மகள் அவரது கணவருடன் அவ்வப்போது பெற்றோர் வீட்டிற்கு வந்து ஓரிரண்டு நாட்கள் தங்கி விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
அப்போது அமுதா அவரது அக்கா கணவருடன் மாமா என்ற முறையில் நன்றாக பேசி பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. எனவே பெற்றோர் நிலத்திற்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருக்கும் அமுதா அவரது மாமாவை அழைத்து அவருடன் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பது மற்றும் வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் அமுதா மீது அவரது அக்காவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் தனது கணவரை கண்காணித்த நிலையில் அமுதாவுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தது தெரியவந்தது.
எனவே இது குறித்து அவர் தனது தாய் தந்தையிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் அமுதாவை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அமுதா தொடர்ந்து தனது மாமாவுடன் திருமணத்திற்கு மீறிய உறவை தொடர்ந்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சிவன் மற்றும் வைரம்மாள் கடந்த (மே 30) ஆம் தேதி வீட்டில் இருந்த அமுதாவை மிரட்டி பூச்சி மருந்தை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் பூச்சி மருந்து குடித்தும் அமுதா உயிரிழக்காமல் போராடி வந்த நிலையில் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கின்றனர். இதற்கிடையில் அவர் தனது உயிரை காப்பாற்றி கொள்ள போராடிய நிலையில் கழுத்தில் நக கீறல்கள் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மறுநாள் காலை வரை காத்திருந்த சிவன் மற்றும் வைரம்மாள் மகள் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாங்குநேரி போலீசார் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அமுதாவின் கழுத்தில் இருந்த நக கீறல்களை பார்த்து சந்தேகமடைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக அமுதாவின் அக்கா மற்றும் தாய் தந்தையிடம் விசாரித்த நிலையில் சிவன் தானும் தனது மனைவியும் சேர்ந்து மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அக்காவின் கணவருடன் கள்ள தொடர்பில் இருந்த மகளை பெற்றோர் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்