திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 38 வயதுடைய அருண். இவர் விவசாய கூலி வேலை செய்தும் கறவை மாடுகள் வைத்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் மணல் கடத்தி வருவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அருண் மாட்டு வண்டியில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வருவதை எதிர்த்து கார்த்திக் பெட்டிஷன் போடுவது காவல் துறைக்கு தகவல் அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
எனவே இதன் காரணமாக இருவருக்கும் இடையே தொடர்ந்து முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சமீப காலமாக அருண்குமார் மணல் கடத்துவதை தவிர்த்து விவசாயக் கூலி வேலை செய்தும், கறவை மாடுகள் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அருண் அவரது மகனான 17 வயதுடைய ஹரிஷை தன்னுடன் அழைத்துக்கொண்டு தேவலாபுரம் சென்று கறவை மாடுகளுக்கு புளிச்ச தண்ணீர் கொண்டுவந்திருக்கிறார். அப்போது சாலையில் அருண் எச்சில் துப்பியதாகவும் அது அங்கு நின்று கொண்டிருந்த கார்த்திக் மீது விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆவேசமடைந்த கார்த்திக் அருகில் இருந்த கடைக்கு சென்று கண்ணாடி பாட்டில் கொண்டு வந்து அருணை வயிறு உள்ளிட்ட பல இடங்களில் குத்தியுள்ளார். மேலும் தடுக்க வந்த அருணின் மகன் ஹரிஷையும் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த அருணின் உறவினர்கள் ஆம்பூர் உம்ராபாத் செல்லும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொலை செய்த கார்த்திக் என்பவரை கைது செய்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து கார்த்திக்கிடம் தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த அருணின் மகன் ஹரிஷ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முன் விரோத காரணமாக ஒருவர் கண்ணாடி பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.