கிருஷ்ணகிரி மாவட்டம், பாலகுறி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ் குமார். இவருக்கு 32 வயதுடைய பானுப்பிரியா என்பருடன் திருமணம் நடைபெற்று இரண்டு மகன்கள் உள்ளனர். மகேஷ்குமார் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால் மனைவி பானுப்பிரியா தனது இரண்டு மகன்கள் மற்றும் மாமனார் செல்லப்பன் மாமியார் காளியம்மாள் ஆகியோருடன் பாலகுறி பகுதியில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பூவரசன் என்பவருடன் பானுப்பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
பூவரசனும் பானு பிரியாவும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்த நிலையில், இதனை கவனித்த உறவினர் ஒருவர் இது குறித்து மகேஷ் குமாருக்கு தகவல் தெரிவித்ததாக தெரிகிறது. இந்த தகவல் அறிந்து பானுப்பிரியாவின் கணவரான ராணுவ வீரர் மகேஷ் குமார் ஜம்மு காஷ்மீரில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்திருக்கிறார். தொடர்ந்து மனைவி பானுப்பிரியாவின் செல்போனை செக் செய்து பார்த்த போது பூவரசனுக்கும் மனைவி பானுப்பிரியாவுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மகேஷ்குமாருக்கும் மனைவி பானுப்பிரியாவிற்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை நடைபெற்றுள்ளது.
இது குறித்து தகவல் தெரிந்த பூவரசன் அன்று நள்ளிரவு 12 மணி அளவில் மகேஷ்குமாரின் வீட்டிற்குள் சென்று மகேஷ் குமாரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் பூவரசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகேஷ்குமாரை குத்தியுள்ளார். அப்போது அவர்கள் சத்தம் கேட்டு வந்த மகேஷ்குமாரின் தந்தையான செல்லப்பனையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க நினைத்து அவர்களை பெட்ஷீட்டில் கட்டி எடுத்துச் சென்று அருகில் உள்ள கொடுகூர் பகுதியில் ஒருவரையும், வெப்பாலம்பட்டி பகுதியில் ஒருவரையும் போட்டு தீ வைத்து எரித்துள்ளனர்.
பின்னர் ஊரின் இரண்டு பகுதியில் எரிந்த நிலையில் உடல்கள் இருப்பதை அறிந்த தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பானுப்பிரியா மற்றும் பூவரசன் கள்ளக்காதலில் இருந்ததும் அதற்கு இடையூறாக இருந்த கணவர் மற்றும் மாமனாரை கொலை செய்து எரித்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் பானுப்பிரியாவின் 10 வயது மகனும் கொலைக்கு உடந்தையாக இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.