

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த டேனியல் அமிர்தராஜ், இவரது மனைவி ஜெனிபர் ஆகிய இருவரும் தனது கை குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சொத்தை மாமனார் போலி கையொப்பமிட்டு விற்று அட்வான்ஸ் ஆக ரூ.30 லட்சம் பெற்றுக் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் முத்து ஸ்டூடியோ என்ற பெயரில் நடத்தி வந்தவர் ஞானதேசிகர். ஞானதேசிகரின் இரண்டாவது மகன் டேனியல் அமிர்தராஜ்க்கு கடந்த 2021 ஆம் வருடம் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஜெனிபர் என்பவருக்கும் 30 பவுன் நகை இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் பேசி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. திருமணத்தின் போது தனது மகனுக்கு தான் குடியிருக்கும் வீட்டை கொடுப்பதாக ஞானதேசிகர் வாக்கு கூறி உயிலும் எழுதி வைத்துள்ளார்.
இந்நிலையில் தங்க நகை வீட்டில் இருந்தால் பாதுகாப்பானது அல்ல, வங்கி லாக்கரில் வைக்க வேண்டும் என்று கூறி மருமகளின் 30 பவுன் நகைகளையும் ஞான தேசிகர் வாங்கி அதனை வங்கியில் வைத்து கடன் பெற்று தனது கடன்களை அடைத்துள்ளார்.
மேலும் தான் குடியிருந்த வீட்டை எழுதிக் கொடுப்பதற்கு மருமகள் ஜெனிபர் பெயரில் கோரம்பள்ளம், ஐயனடைப்பு கிராமப் பகுதியில் கைலாசபுரத்தில் இருந்த ஒரு ஏக்கர் 80 சென்ட் நிலத்தை விற்கவும் ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஒரு பகுதியை ஜெனிபரிடம் கையொப்பம் பெற்று விற்று அந்தப் பணத்தையும் மருமகளிடம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து மருமகள் ஜெனிபர் கேள்வி கேட்டபோது குடும்பத்தில் மாமனார் மருமகள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இது குறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, ஜெனிபர் பெயரில் கைலாசபுரத்தில் கையிருப்பாக இருந்த 80 சென்ட் இடத்தையும் மாமனார் ஞானதேசிகர் மருமகள் பெயரை போலி கையொப்பமிட்டு மற்றொரு நபரிடம் அட்வான்ஸ் ஆக 30 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். அட்வான்ஸ் கொடுத்தவர்கள் ஜெனிபர் வீட்டிற்கு வந்து தனக்கு இடத்தை பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என கூறி மிரட்டி சென்றுள்ளனர். மேலும், தற்போது ஜெனிபர் மற்றும் டேனியல் அமிர்தராஜ் குடும்பமாக குடியிருந்து வரும் ஞான தேசிகர் ஏற்கனவே உயில் மூலம் கொடுத்த வீட்டையும் காலி செய்து தர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மருமகள் ஜெனிபர் தனது கணவர் டேனியல் அமிர்தராஜ் ஆகியோர் ஞானதேசிகரை தொடர்பு கொண்ட போது மாமனார் ஞான தேசிகர் தனது மனைவி கெட்ஸியுடன் தலைமறைவு ஆனது தெரியவந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து மருமகள் ஜெனிபர் மற்றும் அமிர்தராஜ் மற்றும் தனது இரண்டு கை குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்து சென்றனர்.
சொந்த மருமகளின் சொத்தை அவருக்கே தெரியாமல் போலி கையொப்பமிட்டு விற்க முயன்ற மாமனார் மீது மருமகள் மற்றும் மகன் தனது கை குழந்தையுடன் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.