ஆண் குழந்தை மோகத்தால் பறிபோன இரட்டை பெண் குழந்தைகள் உயிர்! தந்தையே கிணற்றில் தள்ளி கொன்ற கொடூரம்

குழந்தை பிறப்பதற்கு முன்பு கூட அவர்கள் மௌனிகாவை கருக்கலைப்பு செய்யும்படி பலமுறை வற்புறுத்தியுள்ளனர்...
twin babies
twin babies
Published on
Updated on
2 min read

தெலுங்கானா மாநிலம், ஜூபிலி நகர் கிராமத்தில் நான்கு வயது இரட்டை பெண் குழந்தைகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்கு, ஒரு குடும்பத்திற்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற தீராத ஆசையே காரணம் என்று காவல்துறை கூறியதுடன், குழந்தைகள் கொல்லப்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்திகளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கரீம்நகர் ஊரக வட்ட ஆய்வாளர் ஏ. நிரஞ்சன் ரெட்டி கூறுகையில், பெண் குழந்தைகள் குடும்பத்திற்குச் சுமையாகி விடுவார்கள் என்று நம்பியதால், இரட்டைக் குழந்தைகளின் தந்தையான 28 வயது ஸ்ரீசைலம், அவரது பெற்றோர் அசோக், லாவண்யா மற்றும் தம்பி ராகேஷ் ஆகியோர் சேர்ந்து அந்தக் குழந்தைகளை கொல்ல சதித்திட்டம் தீட்டினர்.

காவல்துறையின் தகவல்படி, பிரதிமா மருத்துவக் கல்லூரியில் கணினி இயக்குநராகப் பணிபுரிந்து வரும் எம்.காம் பட்டதாரியான ஸ்ரீசைலம், 2020ல் மௌனிகாவைத் திருமணம் செய்துள்ளார். 2022ல் இந்தத் தம்பதியருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால், ​​பெண் குழந்தைகள் என்பதால் அவர் அக்குழந்தைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், "குழந்தைகள் பிறந்த பிறகு கூட மருத்துவமனையில் அவர் அவர்கள் அருகில் கூட செல்லவில்லை", என்று நிரஞ்சன் ரெட்டி கூறினார். இதுமட்டுமின்றி, மேலும், ஸ்ரீசைலத்தின் பெற்றோருக்கும் அவரின் தம்பிக்கும் கூட இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது பிடிக்கவில்லை. குழந்தை பிறப்பதற்கு முன்பு கூட அவர்கள் மௌனிகாவை கருக்கலைப்பு செய்யும்படி பலமுறை வற்புறுத்தியுள்ளனர், ஆனால் மௌனிகா அதற்கு மறுப்புத்தெரிவித்துள்ளார்.

இதனால், ஸ்ரீசைலம் தனது மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து, இறுதியில் மௌனிகாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்து, பெண்களின் திருமணங்களுக்காகச் செலவிடப்படும் என்று அவர் நம்பியதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்ரீசைலத்தின் பெற்றோரும் சகோதரனும் கூட அந்த இரட்டைக்குழந்தைகளால் சொத்து போய்விடும் என்ற எண்ணத்தில், அவர்கள் நால்வரும் சேர்ந்து குழந்தைகளைக் கொல்ல சதி செய்துள்ளனர்.

விசாரணையின்படி, குற்றம் நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே அந்தக் குடும்பத்தினர் குழந்தைகளைக் கொல்ல சதி செய்துள்ளனர். ஏப்ரல் 3ம் தேதி மதியம், ஸ்ரீசைலம் தனது மனைவியிடம் வீட்டிலேயே தங்கி மட்டன் கறி சமைக்குமாறு கூறிவிட்டு, விரைவில் திரும்பி விடுவதாகக் கூறி குழந்தைகளை அவர்களது குடும்பத்திற்குச் சொந்தமான விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளை கொலை செய்வதற்காக விவசாயிகள் யாரும் வயல்களில் இல்லாத நேரத்தை ஸ்ரீசைலம் தேர்ந்தெடுத்துள்ளார், என்று காவல்துறை கூறியது. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அவர்களைக் கிணற்றருகே உட்கார வைத்து, முதலில் கீதன்விகா என்ற குழந்தையை கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். கிணற்றில் விழுந்த அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இரண்டாவது குழந்தையான கீதாம்ஷி, தண்ணீரில் தத்தளித்து உயிர் பிழைக்கப் போராடிக்கொண்டிருந்தது. குழந்தை இன்னும் உயிரோடு இருப்பதை ஸ்ரீசைலம் உணர்ந்ததும், கிணற்றில் இறங்கித் தன் கைகளாலேயே குழந்தையை மூழ்கடித்துக் கொன்றுள்ளார், என்று வட்ட ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

கொலை செய்த பிறகு, அதை ஒரு விபத்து போல் தோற்றமளிப்பதற்காக, ஸ்ரீசைலம் ஒரு போலியான மீட்பு முயற்சியை அரங்கேற்றி உதவிக்காகக் கூச்சலிட்டதாக காவல்துறை தெரிவித்தது. அவரது அழுகுரலைக் கேட்டு தாய் மௌனிகா வயலுக்கு வந்தபோது, ​​ஒரு மகள் கிணற்றருகே கிடப்பதையும், மற்றொரு மகளைக் காணவில்லை என்பதையும் தெரிந்துகொண்டுள்ளார். கிராம மக்களும், விவசாயிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கயிறுகளைப் பயன்படுத்தி குழந்தைகளை வெளியே இழுத்தனர். விசாரித்தபோது, ​​ஸ்ரீசைலம் புல் வெட்டச் சென்றதாகவும், பின்னர் சிறுமிகளைக் காணவில்லை என்பதைக் கண்டறிந்ததாகவும் கூறியிருக்கிறார். அவரது கதை மாறிக்கொண்டே இருந்ததால் கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

போலீசார் தலையிடுவதற்கு முன்பு, ஆத்திரமடைந்த கிராமவாசிகள் ஸ்ரீசைலத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்று, தனது பெற்றோர் மற்றும் சகோதரரிடம் "திட்டம் வெற்றி பெற்றுவிட்டது" என்று தெரிவித்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் கோபால்பூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் பின்தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். கிணற்றிலிருந்து இரண்டாவது குழந்தையின் உடலை மீட்பதற்காக, காவல்துறை பின்னர் நிபுணத்துவம் பெற்ற நீச்சல் வீரர்களை வரவழைத்து உடலை கைப்பற்றியது.

"நாங்கள் விசாரித்த குற்றங்களிலேயே இது மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் மனிதாபிமானமற்ற குற்றங்களில் ஒன்றாகும்," என்று நிரஞ்சன் ரெட்டி கூறினார். "பாதிக்கப்பட்டவர்கள், சிறுமிகள் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்ட அப்பாவி குழந்தைகள். இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று அவர் கூறி உள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com