"அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.." - லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த பாலியல் தொந்தரவு! கைது செய்யப்படுவாரா ஆண்கள் விடுதி வார்டன்?

ஆண்கள் கல்லூரி வார்டன் இரவு நேரங்களில் செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்.
Hostel warden harassment
Hostel warden harassmentHostel warden harassment
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் விடுதி வார்டன் மாணவிகளுக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக ஆட்சியரிடம் மாணவிகள் புகாரளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தனியார் பொறியியல் மற்றும் கடைய அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கல்லூரியில் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள், ஏற்கனவே கல்லூரி விடுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை தரமற்ற உணவு வழங்கப்படுகிறது, போதுமான வசதிகள் இல்லை என்று மாணவிகள் தரப்பில் இருந்து பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகத்திடமோ அல்லது விடுதி நிர்வாகத்திடமோ இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

இந்நிலையில், உணவருந்துவதற்காக பெண்கள் விடுதியில் உள்ள மாணவிகள் ஆண்கள் விடுதிக்கு செல்வது வழக்கம். உணவு தயாராகிவிட்டதா? என்பதை தெரிவிக்க வேண்டி அங்குள்ள பெண்களின் தொலைபேசி எண்களை வாங்கிவைத்துள்ளார். ஆண் விடுதி வார்டன் தேவையற்ற நேரத்தில் அவர்களுக்கு அழைப்பது, பாலியல் ரீதியாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார். இது குறித்து நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும், "இதை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..ஒருத்தர் பிரச்சனையை எல்லாரோட பிரச்சனையா மாத்தாதீங்க" என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், இன்று (மே 06) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாணவிகள் 30க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் துர்காவினை சந்தித்து தங்களை வேறு ஒரு கல்லூரிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தீபா என்ற மாணவி, நாங்கள் தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறோம். நாங்கள் யாரும் இந்த கல்லூரிக்கு விருப்பப்பட்டு சேரவில்லை எங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்த காரணத்தினால் இந்த கல்லூரியில் வந்து சேர்ந்துள்ளோம். விடுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை உணவு மிகவும் மோசமாக உள்ளது ஆண்கள் கல்லூரி வார்டன் இரவு நேரங்களில் செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்.

இது குறித்து ஆறு மாதங்களாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசினார். மேலும், இந்த ஆண்டு தங்களை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கல்லூரி தாளாளர் செல்வகுமார் உள்பட மூன்று பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com