

கடற்கரையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து ராமநாதபுரம் மகிளா விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மேலும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையர் கடற்கரைக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். அப்போது இருவரும் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த, அடையாளம் தெரியாத மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி, மாணவியிடமிருந்த நகை, பணம் மற்றும் செல்போன்களை பறித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் துப்பட்டாவால் ஹரிகிருஷ்ணனை கட்டிப்போட்டு, அவரது கண் முன்னாலேயே மாணவியை அரிவாளால் தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற காதல் ஜோடி, நடந்த கொடூர சம்பவத்தால் மனவேதனை அடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், நடந்த சம்பவம் குறித்து அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவம் நடைபெற்ற மூக்கையூர் கடற்கரை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சம்பவ நேரத்தில் வந்துசென்ற மூன்று வாலிபர்களை அடையாளம் கண்டனர்.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், பத்மஸ்வரன், தினேஷ்குமார் மற்றும் அஜித்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார், மாணவியிடம் பறிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை பத்மஸ்வரன் தனது தாய் வில்லம்மாளிடம் கொடுத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பத்மஸ்வரனின் தாய் வில்லம்மாளையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றவாளிகளான பத்மஸ்வரன், தினேஷ்குமார் மற்றும் அஜித்குமார் ஆகிய மூவருக்கும் தலா 30 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பத்மஸ்வரனின் தாய் வில்லம்மாளுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
காதலியுடன் கடற்கரைக்கு சென்ற இளைஞரை கட்டிப்போட்டு, பணம் மற்றும் நகைகளை பறித்ததுடன், மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிறப்பாக வாதாடி தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் கீதா, தீர்ப்பு வழங்கிய மகிளா நீதிமன்ற நீதிபதி மற்றும் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.