பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவமும், விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இந்த வழக்கில், தற்போது மீண்டும் ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2004 ஆம் ஆண்டு இவரால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தததாக அவரது குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர்.
சென்னை ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை கடந்த 22 வருடங்களுக்கு முன்பு கல்வி உதவிகள் வழங்குவதாக ஜெம் வீரமணி அவரது வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சிறுமி வீடு திரும்பிய நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்போது சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது .இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எரிந்ததில் அந்த வழக்கு ஆவணங்கள் எரிந்து விட்டதாக போலீசார் தெரிவித்து, அந்த வழக்கை கிடப்பிலேயே போட்டு வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஜெம் வீரமணி சமீபத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிறுமியின் தாய் இரு தினங்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தன் மகளை பாலியல் தொல்லை செய்து அவர் இறப்புக்கு காரணமான வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். புகாரின் பேரில் தற்போது ஜெம் வீரமணி மீது மற்றொரு போக்சோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெம் வீரமணிக்கு எதிராக 15 சிறுமிகள் , மற்றும் பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். வீரமணியால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கை 22 ஆண்டு பிறகு மீண்டும் போலீஸ் தூசு தட்டி எடுத்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்