“பல ஆண்களுடன் பழகி… ஒரே வருடத்தில் 6 பேரை திருமணம்!” - வடிவேலு பட பாணியில் ஏமாற்றி… தூத்துக்குடியை சுற்றி வந்த கல்யாண ராணி?

தனது இடத்தை மாற்றிய பானுமதி, தஞ்சாவூருக்கு சென்று அங்கே தன்னுடன் வேலை பார்த்த அகிலா என்ற பெண்ணின் சகோதரர்
thoothukudi
Published on: 
Updated on: 
2 min read

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீ மூலக்கரை மேலூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ரேடியோ செட் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். தாய் தந்தை யாரும் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார் ரமேஷ்.

இந்நிலையில் தன்னைப் போன்று தாய் தந்தை இல்லாத பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள செவல்குளம் பகுதியைச் சேர்ந்த பானுமதி என்ற பெண்ணை கடந்த 2025 மார்ச் மாதம் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த ஒரு மாத காலம் சந்தோசமாக இவர்கள் வாழ்க்கை சென்ற நிலையில், மனைவி பானுமதி அடிக்கடி செல்போனில் ஆண் நண்பர்கள் சிலருடன் பேசி வருவதை ரமேஷ் பார்த்துள்ளார். இந்த நிலையில் ஒரு நாள்  பானுமதி செல்போனில் “நல்ல வேலை உன்னை திருமணம் செய்யவில்லை… இப்போ நல்ல வசதியான மாப்பிள்ளை கிடைத்துவிட்டது” என்று சிரித்து பேசியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், பானுமதியிடம் “யாரிடம் பேசினாய்” என கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கணவருடன் தகராறில் ஈடுபட்ட பானுமதி தனது கணவரை பிரிந்து அண்ணன் முத்து வீட்டுக்கு சென்றுள்ளார். 

மேலும் “ரமேஷ் உடன் வாழ விரும்பவில்லை” என்று திருப்பூர் சென்ற பானுமதி அங்கே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான ராஜேஷ் என்ற நபருடன் காதலை வளர்த்துள்ளார். இதில் அவரை ஏமாற்றி திருமணமும் செய்துள்ளார். பின்னர் இதே பாணியில் செல்வம் என்ற இளைஞரையும் சூர்யா என்ற இளைஞரையும் ஏமாற்றி “தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை” என கூறி அவர்களுடன் மனைவி போல வாழ்ந்து பணத்தை பறித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தனது இடத்தை மாற்றிய பானுமதி, தஞ்சாவூருக்கு சென்று அங்கே தன்னுடன் வேலை பார்த்த அகிலா என்ற பெண்ணின் சகோதரர் பிரபாகர் என்பவரையும் தனது திருமண வலையில் சிக்க வைத்துள்ளார். இதைத் தெரிந்த கணவர் ரமேஷ் தஞ்சாவூர் சென்று நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து பானுமதியை விசாரித்த காவல்துறையினர், கண்டித்து கணவர் ரமேஷ் உடன் அனுப்பி வைத்துள்ளனர்.

பல நபர்களை ஏமாற்றி திருமண செய்த நிலையிலும் ரமேஷ் தனது மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்துள்ளார். ஆனால் பானுமதியோ தனது கணவர் ரமேஷ் மீது ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் கவுன்சிலிங் மூலம் சேர்ந்து வாழ அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் கவுன்சிலிங் முடிந்து வரும் வழியிலேயே ரமேஷிடம் பொய்யான காரணத்தை கூறிவிட்டு பானுமதி அவரை கழட்டி விட்டு சென்றுள்ளார். மேலும் விவாகரத்து கேட்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் பானுமதியின் அண்ணன் முத்து அவரது மனைவி செல்வி மற்றும் முத்துவின் சகோதரி பார்வதி ஆகியோர் கூட்டாக சேர்ந்து மோசடி திருமணங்களை மறைத்து கோவில்பட்டியை சேர்ந்த முத்து கோமதிநாயகம் என்பவருக்கு பானுமதியை கடந்த 3/9/ 2026 அன்று திருமணம் செய்து வைத்துள்ளனர்.

wife cheating husband

இதைத் தெரிந்தகொண்ட ரமேஷ் ஒரே ஆண்டில் ஆறு பேரை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்து ஏமாற்றி மோசடியில் ஈடுபடும் தனது மனைவி கல்யாண ராணி பானுமதி மீது ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து, பானுமதி மீது காவல்துறை உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும். இந்த கல்யாண மோசடியில் ஈடுபடுவதற்கு அவருக்கு துணையாக இருந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இதற்கான ஆதாரங்களையும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரமேஷ் ஒப்படைத்தார்.

திருமலை படத்தில் காவல் நிலையத்தில் வடிவேலு விசாரணை செய்யும் காமெடி பாணியில் பானுமதி என்ற பெண் ஒரே ஆண்டில் ஆறு ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோசடி மனைவி மீது முதல் கணவர் புகார் கொடுத்த சம்பவம் திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு இருந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com