

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொடூரமான கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேறு பெண்களுடன் பேசுவதாகக் காதலி கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த காதலன், அவரைத் தாக்கிக் கொலை செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இருவருமே மென்பொருள் துறையில் பணியாற்றி வந்தவர்கள் என்பது இந்தச் சம்பவத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புனேவின் ஹிஞ்சேவாடி பகுதியில் உள்ள சகாரே வஸ்தி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்த இளம்பெண்ணுக்கு 27 வயது. அவர் மகாராஷ்டிராவின் வார்தா பகுதியைச் சேர்ந்தவர். குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞருக்கு 30 வயது. அவர் ஹிங்கோலி பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் புனேவில் உள்ள வெவ்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மென்பொருள் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். மேலும், இருவரும் அருகருகே உள்ள கட்டடங்களில் வாடகைக்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, இருவரும் சுமார் மூன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காதலன் மற்ற பெண்களுடன் பேசுவதை இளம்பெண் விரும்பவில்லை என்றும், இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையே இறுதியில் உயிரிழப்பில் முடிந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் ஒன்றாக உணவு சாப்பிடுவதற்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது பெண்ணின் அறைத் தோழியும் அவர்களுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நள்ளிரவில் இருவரும் பெண் தங்கியிருந்த வாடகை அறைக்குத் திரும்பியுள்ளனர். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் ஏற்பட்ட பிரச்சினையின்போது இளைஞர் காதலியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகும் இருவருக்கும் இடையே மோதல் தொடர்ந்துள்ளது. அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இளைஞர் மீண்டும் அவரை முகத்தில் குத்தியதுடன், தலையைச் சுவரில் மோதியதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலால் இளம்பெண் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
இளம்பெண்ணின் தாயார் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். ஆனால், பலமுறை அழைத்தும் அவர் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார், புனேவில் வசிக்கும் உறவினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த உறவினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட இளைஞரும் காவல்துறையைத் தொடர்புகொண்டு, தனது தோழி மயக்க நிலையில் இருப்பதாகவும், ஆம்புலன்ஸ் அனுப்புமாறும் கேட்டுள்ளார்.
காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்குச் சென்றபோது, இளம்பெண் தனது அறையில் சுயநினைவின்றிக் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இளைஞரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர். தனது காதலியைத் தாக்கியதை அவர் ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த பின்னர் இளைஞர் இரவு முழுவதும் அந்த அறையிலேயே இருந்ததாகவும், மறுநாள் காலை சுமார் 6 மணியளவில் காவல்துறையைத் தொடர்புகொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்புதான் அந்தக் கட்டடத்தில் வாடகைக்குத் தங்க வந்ததாகக் கட்டட உரிமையாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த பிறகே காவல்துறையினர் வந்தபோது இந்தக் கொலை குறித்து தங்களுக்குத் தெரியவந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்ட இளைஞரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து மருத்துவப் பரிசோதனை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. காதல் உறவில் ஏற்பட்ட சந்தேகம், கோபம் மற்றும் கட்டுப்படுத்த முடியாத ஆத்திரம் ஒரு உயிரையே பறித்திருப்பது இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.