
சென்னை மாவட்டம், நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் 50 வயதுடைய வரலட்சுமி. இவரது கணவர் லோகநாதன். வரலட்சுமி தங்கையின் வீட்டார் திருமண நிகழ்வு ஒன்றுக்காக சென்னையில் இருந்து பேருந்து மூலமாக காஞ்சிபுரத்திற்கு கடந்த ஜூலை மாதம் சென்றுள்ளார். பின்னர் நிகழ்ச்சி முடிந்த பின் 14ஆம் தேதி காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வரலட்சுமி குழந்தையுடன் வந்து பேருந்து ஏறி உள்ளார். அதிகப்படியான கூட்டம் இருந்ததால் தனது ட்ராவல் பேக் போட்டு ஓட்டுநருக்கு அருகே இருக்கக்கூடிய சீட்டில் இடம் பிடித்து வைத்து விட்டு பின்னர் மீண்டும் கீழே இறங்கி குழந்தையை அழைத்துக்கொண்டு பேருந்திற்குள் வரலட்சுமி மற்றும் அவரது தங்கை லதா ஏறிய போது வைத்த இடத்தில் பேக் காணாமல் போயுள்ளது.
பையை தேடிய போது அதே பேருந்தில் பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் பையை தான் பத்திரமாக எடுத்து காலுக்கு அடியில் வைத்திருப்பதாக தெரிவித்து எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் குழந்தையை வைத்திருப்பதால் இங்கேயே வந்து அமருங்கள் எனவும் அந்த பெண் வரலட்சுமி அழைத்து தனக்கு அருகில் அமர வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த அடையாளம் தெரியாத பெண் தனது கணவர் வரவில்லை எனக்கூறி அந்தப் பேருந்தை விட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். அந்தப் பெண் மீது எதுவுமே சந்தேகம் வராததால் வரலட்சுமி பயணித்து வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் அந்த ட்ராவல் பேக் ஐ திறந்து பார்த்துள்ளார். அப்போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது அவர் வைத்திருந்த ஐந்து சவரன் தங்க நகைகள் திருடு போயிருப்பதை கண்டு உடனடியாக வரலட்சுமி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தான் சீட்டு பிடிப்பதற்காக பேருந்தில் பையை வைத்துவிட்டு குழந்தையை தூக்க சென்ற போது தான் இறுதியாக பை காணாமல் போனதாகவும் ஆனால் துணிகள் மட்டும் கலையாமல் இருந்ததால் தனக்கு எந்தவிதமான சந்தேகமும் ஏற்படவில்லை எனவும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தான் ஐந்து சவரன் நகைகள் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவரான 56 வயதுடைய பாரதி என்பவரை கைது செய்துள்ளனர். பாரதி திமுக நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். பாரதி மீது ஆம்பூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பேருந்து நிலையம் மற்றும் கூட்ட நெரிசலாக இருக்கக்கூடிய இடத்தில் பாரதி புகுந்து திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்தது.
இவரிடம் கோடிக்கணக்கில் பணம் இருந்தும் திருட்டுத் தொழிலை விட்டு விடுங்கள் என பல பேர் கூறிய போதும் விடாமல் திருடி வந்துள்ளார். குறிப்பாக பேருந்து பயணிகள் சீட்டை பிடிக்க முயலும் போது பைகளில் இருந்தும், பேச்சு கொடுத்து திசை திருப்பி நகைகளை திருடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் பாரதி. போலீசாரால் கைது செய்யப்பட்ட பாரதி விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.