

உத்தரபிரதேசம் மாவட்டம் கிரேட்டர் நொய்டாவிலிருந்து டெல்லியின் காஷ்மீர் கேட் வரை சுமார் 47 கி.மீ. தூரம், எந்தவொரு காவல் சோதனைச் சாவடியிலும் நிறுத்தப்படாமல் பயணித்த படுக்கை வசதி கொண்ட பேருந்தில், (Sleeper bus) பதின்மவயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 4 அன்று நடந்த இந்தச் சம்பவமானது, 2012 டிசம்பர் மாதம் நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கிற்குப் பிறகு, பொது மற்றும் தனியார் பயணிகள் பேருந்துகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கிடைத்த தகவல்களின்படி, பேருந்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் ஆகியோர் அப்பேருந்தை பழுதுபார்ப்பதற்காக கிரேட்டர் நொய்டாவின் சூரஜ்பூரில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்-பிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
வாகனம் பழுதுபார்க்கப்பட்ட பிறகு, இருவரும் வடக்கு டெல்லியின் திமர்பூரில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது அந்தப் பதின்மவயது பெண்ணைக் கவனித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. பரி சௌக்கில் அந்த பெண் தனியாக நின்று பேருந்தை நிறுத்த சைகை காட்டியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த இரு நபர்களும் அந்த பெண்ணை வாகனத்தில் ஏறுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் பேருந்தினுள் அந்தப் பெண் அந்த இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் ஆகியோர் காஷ்மீர் கேட் பகுதியில் அப்பெண்ணை நிற்கதியாய் கைவிட்டுவிட்டு, வாகனத்தை திமர்பூர் வாகன நிறுத்துமிடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அந்த பகுதியில்தான் அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த பேருந்தின் ஜன்னல்களை கனமான திரைகள் மூடியிருந்ததால், பேருந்தின் வெளிப்பக்கத்தில் இருந்து யாராலும் வாகனத்தின் உள்ளே பார்க்க முடியவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. போக்குவரத்து மற்றும் நீதிமன்றத்தால் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளின்படி, வணிகப் பயணிகள் வாகனங்களுக்குள் பார்வையைத் தடுக்கும் திரைச்சீலைகள் அல்லது பிற தடைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பேருந்து, நொய்டா-கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலை மற்றும் ரிங் ரோட்டின் சில பகுதிகளின் வழியாகப் பயணித்ததுடன், சில்லா எல்லை, மயூரி விஹார், கீதா காலனி மற்றும் ரிங் ரோடு வழித்தடம் உள்ளிட்ட, நொய்டா மற்றும் டெல்லிக்கு இடையேயான முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் வழியாகவோ அல்லது அவற்றின் அருகிலோ கடந்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பேருந்து சோதனைக்கான எந்த பகுதிகளிலும் அந்த பேருந்து நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்துக் கேட்டபோது, விரைவுச்சாலை மற்றும் சுற்றுச்சாலையின் சில பகுதிகளில் தடுப்புகளை அமைப்பது என்பது கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் என்று காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. மேலும், இந்த பயணத்தின் போது எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
வணிகப் பயணிகள் வாகனங்களில், ஜிபிஎஸ்/வாகன கண்காணிப்பு, அவசரகாலப் பொத்தான்கள் (Panic buttons), கண்காணிப்பு அல்லது அவசரகால பதில் நடவடிக்கைகளுடன் இணைக்கப்படுவது கட்டாயமாகும். மேலும், கட்டாயப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதி செயல்பட்டதா? மற்றும் திறம்படக் கண்காணிக்கப்பட்டதா? என்பது குறித்து இந்தச் சம்பவம் மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், காவல்துறையினர் சார்பில் பேருந்திலிருந்து முடி மற்றும் பிற உயிரியல் மாதிரிகள் உள்ளிட்ட தடயவியல் ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாதிரிகள் அனைத்தும், டிஎன்ஏ பகுப்பாய்விற்காக பாதிக்கப்பட்டவரின் இரத்த மாதிரிகளுடன் ஒப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் முன்னிலையில் அந்த பதின்மவயது பெண்ணிற்கு அறிவுரை வழங்கப்பட்டது என்றும், பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தினர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்