

குஜராத்தில், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கணவரைக் கொலை செய்து, அவரது உடலை டேர்ட் ஜிஐடிசி பகுதியில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் ரகசியமாகப் புதைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவரது மனைவியும், கள்ளகாதலன் எனக் கூறப்படும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் போன கணவர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உண்மை வெளிவருவதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவரின் மனைவி பிருத்வி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, அவர் வேலைக்காக ஆஸ்திரேலியா சென்றுவிட்டதாக உறவினர்களிடம் பொய் சொல்லி வந்ததாக ஜாம்நகர் காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செல்லத் திட்டமிட்டிருந்த ஜிக்னேஷ் மவாடியாவின் (உயிரிழந்தவர்) குடும்ப உறுப்பினர் ஒருவர், ஜிக்னேஷ் மவாடியாவின் ஆஸ்திரேலிய முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் கேட்டபோது, பிருத்வியால் தெளிவான பதில் அளிக்க முடியாததால்தான் இந்த வழக்கு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜிக்னேஷ் ஆஸ்திரேலியாவில் குடியேறிவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால், அவர் எங்கே இருக்கிறார்? என்பது குறித்த கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்காததால், குடும்பத்தினரின் சந்தேகம் வலுத்து, அவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பிருத்வி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அந்த விசாரணையின்போது, தனது கணவரின் மரணத்தில் தனக்குத் தொடர்பு இருப்பதை அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போதுதான் திடுக்கிடவைக்கும் பல உலைகள் வெளிவந்துள்ளன.
ஜிக்னேஷை திருமணம் செய்வதற்கு முன்பு பிருத்வி, நிலேஷ் என்ற நபருடன் உறவில் இருந்துள்ளார். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அந்த உறவு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்களது உறவிற்கு கணவன் தடையாக இருப்பார் என நினைத்து பிருத்வியும் அவரது கள்ளகாதலனும் சேர்ந்து ஜிக்னேஷின் பானத்தில் சயனைடு கலந்து அவரைக் கொல்ல அந்த இருவரும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். பின்னர், அதைக் குடித்த ஜிக்னேஷ் உயிரிழந்துள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, கொலையை மறைக்கும் நோக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் டேர்ட் ஜிஐடிசி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் 12 அடிக்கும் அதிகமான ஆழமுள்ள ஒரு குழியில் அவரது உடலைப் புதைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த வாக்குமூலம் கிடைத்தவுடன், தடயவியல் குழுக்களும் காவல்துறையினரும் அந்த இடத்தில் தோண்டத் தொடங்கியுள்ளனர். தோண்டப்பட்ட குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித உடற்பாகங்கள், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், லால்பூர் கோட்டத்தின் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரதிபா, "பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் விசாரணை நடத்தியபோது, முழு சம்பவமும் வெளிப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், உடலை மீட்பதற்காக டேர்ட் ஜிஐடிசி பகுதியில் உள்ள ஒரு குழியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது" என்று கூறியுள்ளார். மேலும், காவல்துறை மேலதிக தடயவியல் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொண்டு வருவதால், இரு சந்தேக நபர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கண்டெடுக்கப்பட்ட உடல்களின் அடையாளத்தை உறுதி செய்வதும், தடயவியல் பகுப்பாய்வை நிறைவு செய்வதும் இந்த வழக்கு முன்னோக்கிச் செல்வதற்கு முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவில்லை. இந்த வழக்கு விசாரணையில் உள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.