நடிகையாக ஆசைப்பட்ட பெண்.. கொன்று செப்டிக் டேங்கில் மறைத்த "பூசாரி" - தலை சுற்றவைக்கும் "கோவை 'டூ' தெலங்கானா" சம்பவம்!

ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சி
NADAYAKA ASAIPATTA PENNUM PUSARIUM
nadikai
Published on
Updated on
2 min read

ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 33 வயதுடைய குருகாந்தி அப்சரா என்பவரை கொலை செய்து, அவரது உடலை செப்டிக் டேங்கில் மறைத்த 36 வயதுடைய பூசாரி இய்யாகரி வெங்கட சாய் கிருஷ்ணாவுக்கு ரங்கரெட்டி மாவட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

கொலை வழக்கின் விவரங்கள்

குருகாந்தி அப்சரா, தொலைக்காட்சி நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் ஹைதராபாத் சரூர்நகர் பகுதியில் தனது தாய் அருணாவுடன் வசித்து வந்தவர். பங்காரு மைசம்மா கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்த சாய் கிருஷ்ணாவுக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. சாய் கிருஷ்ணா ஏற்கனவே திருமணமானவர் என்பதை அப்சராவிடம் மறைத்து, 2023 தொடக்கத்தில் ஒரு உறவை தொடங்கியதாக தெரிகிறது. அருணா அடிக்கடி கோயிலுக்கு சென்றதன் மூலம் இந்த தொடர்பு உருவாகியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

2023 மார்ச் மாதத்தில், சாய் கிருஷ்ணா திருமணமானவர் என்பது அப்சராவுக்கு தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் "என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லையெனில் உண்மையை வெளியிடுவேன்" என்று கூறி அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சாய் கிருஷ்ணாவுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. 2023 ஜூன் 3 ஆம் தேதி, "கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்கிறேன்" என்று கூறி, அப்சராவை காரில் அழைத்துச் சென்ற சாய் கிருஷ்ணா, ஷம்ஷாபாத் பகுதியில் உள்ள தனிமையான இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில், கல்லால் தாக்கி அப்சராவை கொலை செய்துள்ளார்.

பின்னர், உடலை மறைப்பதற்காக, முதலில் காரில் தனது வீட்டிற்கு கொண்டு சென்று, வாகன நிறுத்துமிடத்தில் இரண்டு நாள்கள் வைத்திருந்தார். அதன்பின், சரூர்நகரில் உள்ள சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்திற்கு பின்புறமுள்ள சாக்கடை மேன்ஹோலில் உடலை வீசி, சிமெண்ட் கொண்டு மூடினார். ஆனால், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் மொபைல் சிக்னல்களை ஆய்வு செய்த காவல்துறை, சாய் கிருஷ்ணாவை கைது செய்து, அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் உண்மையை கண்டறிந்தது.

நீதிமன்ற தீர்ப்பு

ரங்கரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தொலைபேசி பதிவுகள், தடய அறிவியல் அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில், சாய் கிருஷ்ணாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. "இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை" என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டு, ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அப்சராவின் கடந்த காலம் - கோயம்புத்தூர் திருமணம்

அப்சராவின் வாழ்க்கையில் ஹைதராபாத் சம்பவத்திற்கு முன்னரும் ஒரு சோகமான அத்தியாயம் உள்ளது. இவர் ஏற்கனவே கோயம்புத்தூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கார்த்திக் ராஜா என்பவரை திருமணம் செய்திருந்தார். ஆனால், இந்த உறவு சுமுகமாக அமையவில்லை. அப்சரா மற்றும் அவரது தாய் அருணா, ஆடம்பரமான வாழ்க்கைக்காக கார்த்திக்கை அழுத்தம் கொடுத்து, 25 லட்சம் ரூபாய் கடன் வாங்க வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அழுத்தங்களைத் தாங்க முடியாமல், அப்சரா மற்றும் அருணா, கார்த்திக் மீது வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் அளித்தனர். இதனால், கார்த்திக் 15 நாள்கள் சிறையில் இருந்து வெளியே வந்தார். இறுதியில், இந்த சுமைகளை தாங்க முடியாமல் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். கார்த்திக்கின் குடும்பத்தினர் அப்சராவை குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தாலும், அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அப்சரா மற்றும் அருணா கோயம்புத்தூரை விட்டு ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்தனர். அதன்பிறகு, பூசாரியுடன் நெருக்கம் ஏற்பட்டு, இப்போது அவர் கொடூரமாக கொலை செய்யப்படும் அளவுக்கு சென்றுவிட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com