

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த மாரம்பேடு பகுதியில் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலை ஓரத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 06) ஆம் தேதி இரவு இருசக்கர வாகனம் ஒன்று விழுந்து கிடந்தது. அருகில் சென்று பார்த்தபோது பள்ளத்தில் இளைஞர் ஒருவர் மயங்கி கிடந்ததை கண்ட பொதுமக்கள் 108ஆம்புலன்சுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயக்கி கிடைத்தவரை மீட்டு பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டை மற்றும் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் நெற்றி உள்ளிட்ட இடங்களில் லேசான சிராய்ப்பு காயங்களுடன் சாலையோரம் கிடந்ததால் விபத்தால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிந்து உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் வியாசர்பாடியை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய 29 வயதுடைய மணிகண்டன் என்பது தெரிய வந்தது. இதனிடையே சனிக்கிழமை நடைபெற்ற பிரேத பரிசோதனையில் உடலில் உள் காயங்களும், முகத்தில் இருந்த காயங்களையும் பரிசோதனை செய்ததில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. எனவே சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து கொலை செய்யப்பட்டவரின் செல்போன் பயன்பாட்டை வைத்து நடத்திய விசாரணையில் மணிகண்டன் கடைசியாக வியாசர்பாடியில் அவரது நண்பர்களுடன் இருந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து போலீசார் வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டனின் நண்பன் 44 வயதுடைய செந்தில் என்கிற டிங்கர் செந்திளிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. செந்தில் செங்குன்றம் அடுத்த சிறுங்காவூர் பகுதியில் வீடு ஒன்றை கட்டி வருவதும், அங்கு சென்று வெள்ளிக்கிழமை நண்பர்கள் மூவர் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் உருட்டுக்கட்டையால் அடித்ததில் மணிகண்டன் உயிரிழந்ததால் அவரது சடலத்தை சாலையோரம் வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து நண்பனை கொலை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி செந்தில்குமாரை சோழவரம் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய விக்கி என்கிற விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர். மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்து விபத்து போல சாலையோரம் சடலத்தை வீசி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.