அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகத் தனது திருமண வீட்டில் இடைவிடாமல் துன்புறுத்தப்பட்டதாகவும், அடிக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும், அடிப்படை சுதந்திரம் மறுக்கப்பட்டதாகவும் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். தனது 'குஜராத்தி வழிக் கல்வி', திருமணமாகி சென்ற வீட்டில் தொடர்ச்சியான அவமானத்திற்கான ஒரு காரணமாக அமைந்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இறுதியாக, 28 வயதான அந்தப் பெண், தனது கணவர் மற்றும் மாமியார் வீட்டினர் மீது குடும்ப வன்முறை, திருமண பலாத்காரம் மற்றும் வரதட்சணைக் கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளைக் கூறி, (அகமதாபாத் கிராமப்புற) மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஏப்ரல் 9 அன்று தாக்கல் செய்யப்பட்ட புகாரின்படி, நவம்பர் 2021ல் திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண், அவரது திருமணம் நடந்த சில நாட்களுக்குள்ளேயே பிரச்சனைகள் தொடங்கியதாகக் கூறுகிறார். அவரது குஜராத்தி வழிக் கல்வி, கணவரது வீட்டில் தொடர்ச்சியான கேலிக்கு உள்ளாகியுள்ளது. அந்த பெண் "போதுமான அளவு புத்திசாலி இல்லை" என்றும் அவர்களால் கூறப்பட்டுள்ளார். மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் ஒப்பிட்டுள்ளார். மேலும் வீட்டு வேலைகளைக் கையாளும் அவரது திறமை குறித்து ஏளனம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது கணவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, அவரை உடல்ரீதியாகத் தாக்கி, அப்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் உறவுக்கு வற்புறுத்தியுள்ளார் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தான் என்ன சாப்பிடலாம், எங்கு செல்லலாம் என்பவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அவர் கூறினார். அப்பெண்ணின் தந்தை கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது கூட, அவர் தன் பெற்றோரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அவரது மாமியார் குடும்பத்தினரும், கணவரும் வரதட்சணையாக 10 லட்சம் ரூபாய் கேட்டதாகக் கூறப்படுகிறது. அவரது தந்தை 2022ல் அந்தத் தொகையைச் செலுத்திய போதிலும், தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒருமுறை அப்பெண்ணின் பெற்றோர் அவரைப் பார்க்க வந்தபோது, கணவன் வீட்டார் அவரை சந்திப்பதைத் தடுப்பதற்காக, அப்பெண்ணை குளியலறைக்குள் பூட்டி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தன் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அப்பெண் கண்டுபிடித்தப் பிறகு, பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு முன்பு, தான் பலமுறை மிரட்டப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். அவரது மாமியார் வீட்டார், அவருடைய சில நகைகளைத் தங்களுடையதாக எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சமூக தலையீடு மற்றும் ஆலோசனை மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் எந்தவொரு சமரசத்திற்கும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்பெண் தற்போது தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பாரதிய நியாய சம்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.