

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த (34) வயது பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்த அவருக்கு அப்போது பக்கத்து வீட்டில் வசித்த திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை பாதித்த அப்பெண் தன் சொந்த ஊருக்கு வந்து விட்டார். பின்னர் அவரை பார்க்க தர்மபுரிக்கு வந்த ராஜேஷ் அந்த பெண் குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். பின் “என்னுடன் நீ பேசவில்லை என்றால் உனது குளியல் வீடியோவை வெளியிட்டு விடுவேன்” என மிரட்டியுள்ளார். இருவருக்கும் இதில் தகராறு தொடர்ந்து வந்துள்ளது. அதையடுத்து கடந்த இரு நாட்களுக்கு முன் பெண்ணின் குளியல் வீடியோவை ராஜேஷ் இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்துள்ளார்.
வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இது குறித்து அவரிடம் கேட்டபோது “நேரில் வருகிறேன் பேசிக் கொள்ளலாம்” என கூறியுள்ளார் ராஜேஷ். வீடியோவை டெலீட் செய்ய கேட்டதிற்கும் மறுத்துள்ளார். இந்நிலையில் அப்பெண் அரூர் போலீஸில் புகார் அளிக்க போவதாக தெரிவித்துள்ளார். அவரை ராஜேஷ் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது இதுகுறித்தும் அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.