

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில், மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த கணவன், அவரது அந்தரங்க உறுப்புகளில் தரை சுத்தம் செய்யும் அமிலத்தை ஊற்றி கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒரு மாதத்திற்குப் பிறகே காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.
புனே கிராமப்புற பகுதியில் வசித்து வந்த 25 வயது பெண் ஒருவர், தனது கணவரால் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக உருளி காஞ்சன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வெல்டராக வேலை செய்து வரும் அவரது கணவர், தொடர்ந்து மனைவி மீது சந்தேக குற்றச்சாட்டுக்களை வைத்து சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர், ஆத்திரத்தில் மனைவியை தாக்கிய அவர், தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் அமிலத்தை அவரது பிறப்புறுப்புகளில் ஊற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலால் பெண் கடுமையாக காயமடைந்த நிலையில், தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்காமல் வீட்டிலேயே அடைத்து வைத்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவித்தாலோ அல்லது காவல்துறையை அணுகினாலும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதனால் அச்சத்தில் இருந்த அவர், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அமைதியாக இருந்துள்ளார். சமீபத்தில், அந்த பெண் சோலாப்பூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று, தனக்கு நடந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். இதையடுத்து குடும்பத்தினரின் ஆதரவுடன் அவர் மீண்டும் புனே திரும்பி வந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், உருளி காஞ்சன் காவல்துறையினர், அந்த நபர் மீது பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் காயம் ஏற்படுத்துதல், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.