

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதுடைய ஆதித்யன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பிரேமா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் ஆதித்யன் டாட்டா ஏஸ் சரக்கு வாகன டிரைவராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் எப்போதும் போன் பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்.
ஆதித்யன் வேறொரு பெண்ணுடன் பழகி வருவதும் வேலைக்கு கூட செல்லாமல் அந்த பெண்ணுடன் தொடர்ந்து பேசுவதையும் அறிந்த பிரேமா இது குறித்து அவரது கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது ஆதித்யன் “நான் யார் கூட வேணா பேசுவேன் அதை நீ கேட்கிற வேலை வச்சிக்காத” என கூறி பிரேமாவை அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் தனக்கு துரோகம் செய்கிறாரே என பிரேமா மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.
இதற்கிடையே நேற்று வழக்கம்போல் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஆதித்யன் வீட்டில் இருந்து டீசலை எடுத்து பிரேமா மீது ஊற்றி கொளுத்தி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரேமா அலறி சத்தம் போட்ட நிலையில் பிரேமாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அங்கு 70 சதவீத காயமடைந்த பிரேமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற குத்தாலம் போலீசார் பிரேமா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து ஆதித்யனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கணவன் மனைவியை டீசல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.