“நான் ஒருவரை கொன்று விட்டேன் என்னை கைது செய்யுங்கள்” - கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் தூங்கிய நபர்.. சடலத்தை தேடும் போலீசார்!

கொலைக்கு பயன்படுத்திய கத்தியை அங்கேயே வீசிவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்று...
Thiruvallu
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் புதுப்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான ராமலிங்கம். இவர்கள் இருவருக்கும் இடம் தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் பலமுறை வாக்குவாதம் மற்றும் மோதல்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை சேட்ராஜ், ராமலிங்கத்திடம் சமரசமாக பேசி பிரச்சினையை முடித்துக் கொள்ளலாம் என்று கூறி அழைத்துச் சென்றதாக தெரிகிறது. பின்னர் இருவரும் மது வாங்கிக் கொண்டு அருகில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

அப்போது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ராமலிங்கத்தை, முன்கூட்டியே திட்டமிட்டபடி சேட்ராஜ் திடீரென கத்தியால் கழுத்தை அறுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடிய ராமலிங்கம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவர் உயிரிழந்ததை உறுதி செய்த சேட்ராஜ், கொலைக்கு பயன்படுத்திய கத்தியை அங்கேயே வீசிவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்று, இரவு முழுவதும் வீட்டிலேயே இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இன்று காலை மீஞ்சூரில் இருந்து பேருந்தில் திருவொற்றியூருக்கு சென்ற சேட்ராஜ், சில மணி நேரம் அங்கு சுற்றித்திரிந்த பிறகு, மனம் மாறிய நிலையில் நேரடியாக திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு சென்று, "நான் ஒருவரைக் கொலை செய்து விட்டேன்" என்று போலீசாரிடம் கூறி சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த திருவொற்றியூர் போலீசார், சேட்ராஜ் அளித்த தகவலின் அடிப்படையில் உடனடியாக மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் போலீசார், அவர் கூறிய ஏரிக்கரை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடியும் முதலில் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து, சேட்ராஜை மீஞ்சூர் பகுதிக்கு அழைத்துச் சென்று சம்பவ இடத்தை அடையாளம் காட்ட வைத்து போலீசார் தீவிர தேடுதல் மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடம் தொடர்பான நீண்டநாள் தகராறை தீர்த்துக் கொள்வதாக கூறி மது அருந்த அழைத்துச் சென்று, போதை ஏறிய நிலையில் பக்கத்து வீட்டுக்காரரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com