

பழனியில் அண்ணனை வெட்டிக் கொன்றுவிட்டு பெரியப்பாவிடம் போனில் வாக்குமூலம் அளித்த தம்பி! மரிச்சிலம்பு அருகே தப்பியோடிய செந்தில்குமார் கைது.
பழனியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (40) மற்றும் அவரின் தம்பி செந்தில்குமார் (40) ஆகிய இருவரும் ஒரே இடத்தில் தனித்தனியாகப் பிளாஸ்டிக் கழிவு குடோன் தொழில் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையே தொழில் ரீதியாக கடந்த 11 மாதங்களாக முரண்பாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவரும், பழனி நாகூர் அருகே பிளாஸ்டிக் கழிவு குடோனில் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு ஒரு கட்டத்திற்கு மேல் கொடூர தாக்குதலாக மாறி ஒருவரை ஒருவர் கோடாரியால் தாக்கி கொண்டுள்ளனர். இதில் தம்பி செந்தில்குமார், அண்ணன் ரமேஷ்குமாரை கோடாரியால் சரமாரியாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பழனி நாகூர் அருகே பிளாஸ்டிக் கழிவு குடோனில் நடந்த இந்த கொலைச் சம்பவத்தில் அடுத்தடுத்து கிடைத்த திடுக்கிடும் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய செந்தில்குமார், தனது பெரியப்பாவை தொலைபேசியில் அழைத்து தெரியப்படுத்தியுள்ளார். அந்த ஆடியோவில், "சாத்தியமா முடிஞ்சு போச்சுங்க, அடிச்சு கொன்னு போட்டேனுங்க” என்று சற்றும் பதட்டமில்லாமல் பேசியுள்ளார். பின்னர் அவரின் பெரியப்பா “இருவரும் ஒண்ணா தானே போனீங்க, அப்பறம் என்ன ஆச்சு” என்று கேட்டதற்கு “அவன் என்னை கோடாரி எடுத்து அடிக்க வந்தான், நான் அவனை கீழே தள்ளி கோடரியால் ரெண்டு போடு போட்டேன் செத்து போயிட்டான்” எனச் சிரித்தபடியே பதிலளித்துள்ளார் செந்தில்குமார். ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போன்ற இந்த உரையாடல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தனிப்படை போலீசார் அண்ணனை கொலை செய்த செந்தில்குமாரை தேடி வந்த நிலையில், மரிச்சிலம்பு அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இறந்த ரமேஷ்குமார் உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தொழில் போட்டியில் உடன் பிறந்த அண்ணனையே சொந்த தம்பி கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பழனி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.