“கள்ளக்காதலில் இருந்த காவலர்.. கண்டித்த தங்கை” - கம்பியால் சரமாரியாக தாக்கிய குரூரம்.. முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்!

இந்த விவகாரம் பிரியாவுக்கு தெரியவந்த நிலையில், அவர் தனது அக்காவை கண்டித்ததாக கூறப்படுகிறது...
tuticorin  Woman Murder
tuticorin Woman Murder
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி அருகே அக்காவின் கள்ளக்காதலை கண்டித்த பெண்ணை, ஆத்திரமடைந்த காவலர் ஒருவர் கம்பால் சரமாரியாக தாக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் முகம் சிதைந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய காவலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணி. இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி 40 வயதுடைய பிரியா. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா, முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.

பிரியாவின் அக்கா 42 வயதுடைய சுப்புலட்சுமி, இவரது கணவர் உயிரிழந்த நிலையில், பிரியாவின் வீட்டிலேயே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த பரமசிவத்தின் மகனான 33 வயதுடைய முத்துக்குமார் என்பவருக்கும் சுப்புலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த விவகாரம் பிரியாவுக்கு தெரியவந்த நிலையில், அவர் தனது அக்காவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்புலட்சுமி, முத்துக்குமாரிடம் தெரிவித்த காரணத்தால் பிரியா மீது முத்துக்குமார் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜெராக்ஸ் கடை முன்பு தகராறு

இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் தனது ஜெராக்ஸ் கடையை மூடுவதற்காக பிரியா சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த முத்துக்குமார், பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முத்துக்குமார், அருகில் கிடந்த கம்பை எடுத்து பிரியாவின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பிரியாவின் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தர். பிரியா உயிரிழந்ததை அறிந்த முத்துக்குமார் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றுள்ளார்.

போலீசார் விசாரணை

சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் குமாரவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த பிரியாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுகிர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய முத்துக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே கொலை முயற்சி

கைது செய்யப்பட்ட முத்துக்குமார், தட்டாரமடம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ஏற்கெனவே தனது மாமனார் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படும் வழக்கில் புதுக்கோட்டை போலீசாரால் முத்துக்குமார் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது.

அந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்திருந்த நிலையில், தற்போது பிரியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்காவுடனான கள்ளக்காதல் பழக்கத்தை தங்கை கண்டித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஜெராக்ஸ் கடையை மூடிக்கொண்டிருந்த பெண்ணை காவலர் ஒருவர் கம்பால் தாக்கிக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com