

திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்திய காதலனின் மறுப்பால் ஆத்திரமடைந்த பெண், அவரை மதுவில் மயங்கியபோது கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற பெண், வேலைக்காக ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் வசித்து வந்துள்ளார். அங்கு வீடுகளுக்கு வண்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றிய சதாக்கத் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நிலையில், அனிதாவை அவரது கணவர் பிரிந்து சென்றிருந்ததாகவும், சதாக்கத்துக்கும் குடும்பம் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், அவர்களின் உறவு குறித்து வீட்டு உரிமையாளருக்கு தெரியவந்ததால், அவர்கள் அந்த வீட்டை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அனிதா, அனங்பூர் கிராமத்தின் டோம்கா மொஹல்லா பகுதியில் புதிய அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். அந்த அறைக்கு சதாக்கத் அடிக்கடி சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில், சதாக்கத்தை திருமணம் செய்துகொள்ளுமாறு அனிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால் அவர் அதைத் தள்ளிப்போட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணமாக இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஜூலை 25ஆம் தேதி, சதாக்கத்தை தனது அறைக்கு அழைத்த அனிதா, அவருக்கு மதுபானம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் போதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கூர்மையான கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அறையை வெளியே இருந்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு, அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அழுகிய நிலையில் இருந்த சதாக்கத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், ஜூலை 23ஆம் தேதி அலிகர் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய தனது சகோதரர் திரும்பி வரவில்லை என்று சதாக்கத்தின் சகோதரர் நஸாகத் அலி புகார் அளித்திருந்தார். மேலும், அனிதாவிடம் விசாரித்தபோது, சதாக்கத் தன்னைச் சந்திக்கவே இல்லை என்று அவர் கூறியதும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
போலீசார் மேற்கொண்ட தொழில்நுட்ப விசாரணை மற்றும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அனிதாவை கைது செய்தனர். விசாரணையின்போது, திருமணம் தொடர்பான பிரச்சினையால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலையை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட அனிதாவை போலீஸ் காவலில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.