நோயாளிக்கு வலி நிவாரணி கொடுத்து உல்லாசம்.. இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் 8 மாதங்களுக்கு சஸ்பெண்ட்!

இதற்காக நான் மிகுந்த வருத்தமடைவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்...
நோயாளிக்கு வலி நிவாரணி கொடுத்து உல்லாசம்.. இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் 8 மாதங்களுக்கு சஸ்பெண்ட்!
Published on
Updated on
2 min read

இங்கிலாந்தில் உள்ள கார்டிப் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி நரம்பியல் நிபுணர் சிராக் படேல், தனது நோயாளி ஒருவருடன் தவறான உறவு வைத்துக்கொண்டது மற்றும் அவருக்குச் சட்டவிரோதமாகப் போதைப் பொருட்களைக் கொடுத்தது தொடர்பான வழக்கில் சிக்கியுள்ளார். அவர் தனது நோயாளிக்கு அதிக போதை தரும் வலி நிவாரணிகளைப் பரிந்துரை செய்ததோடு, அதை மருத்துவக் குறிப்புகளிலும் சேர்க்காமல் மறைத்திருக்கிறார். இந்தச் செயலுக்காக அவரை எட்டு மாதங்களுக்குப் மருத்துவப் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இங்கிலாந்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள தகவல்களின்படி, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 2019 மற்றும் 2021-க்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று முறை முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் டாக்டர் சிராக் படேல். இரண்டாவது அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட பழக்கம் உருவாகி, அது ஆறு மாத காலம் நீடித்த பாலியல் உறவாக மாறியுள்ளது. அந்தப் பெண் தன்னை மிரட்டிப் பணம் அல்லது வேறு பலன்களைப் பெற்றதாகக் கூறிய மருத்துவர், பயம் காரணமாகவே அவளுக்குத் தேவையில்லாத வலி நிவாரணிகளை (Opioids) வழங்கியதாகக் குறிப்பிட்டார். தன்னிடம் இருந்தே அந்தப் பெண் பலமுறை மிரட்டல் விடுத்ததாகவும், இதற்காக நான் மிகுந்த வருத்தமடைவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த காலக்கட்டத்தில், அந்தப் பெண்ணின் குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரே மருத்துவர் சிராக் படேல் மட்டும்தான். சிகிச்சை முடிந்துவிட்டதாகக் கருதிய நிலையிலும், அந்தப் பெண் மீண்டும் அறிகுறி இருப்பதாகக் கூறியபோது, முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் நேரடியாகத் தனது செயலாளர் மூலம் அப்பாயின்மென்ட் கொடுத்துள்ளார். மே 2022 முதல் ஜனவரி 2023 வரை அந்தப் பெண்ணுக்குத் தேவைக்கு அதிகமாக மார்பின் மற்றும் டயஸபம் போன்ற மருந்துகளை அவர் வழங்கியுள்ளார். ஆனால், அந்தப் prescriptions எதையும் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வப் பதிவேட்டில் அவர் சேர்க்கவில்லை. இதுவே இவருடைய தொழில்முறைத் தவறுக்குச் சான்றாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

பிப்ரவரி 2023-ல் உறவு கசந்த நிலையில், அந்தப் பெண் மருத்துவருக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறை எந்த வழக்கும் பதிவு செய்யாத நிலையில், அந்தப் பெண் மருத்துவக் குழுமத்திற்குத் தகவல் அளித்துள்ளார். அதன் பிறகு, மருத்துவர் சிராக் படேலே தானாக முன்வந்து ஜிஎம்சி (GMC) எனும் மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தில் தனது செயலை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். தான் அந்தப் பெண்ணால் தொடர்ந்து மிரட்டப்பட்டதால்தான் இத்தகைய செயல்களைச் செய்ய நேர்ந்தது என்று அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும், மருத்துவரின் இந்தச் செயல் தொழில்முறை கண்ணியத்தைச் சீர்குலைப்பதாகவும், நோயாளியின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாகவும் ஜிஎம்சி தரப்பு வழக்கறிஞர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

"இது ஒரு தொடர்ச்சியான தவறு, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நோயாளியின் பாதுகாப்பைச் சிறுமைப்படுத்திய செயல்" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த மோசமான நடவடிக்கைக்குப் பிறகு, அந்த மருத்துவர் தற்போது கார்டிப் மற்றும் வேல் பல்கலைக்கழக மருத்துவக் குழுமத்தில் பணிபுரியவில்லை என்றும், அவர் நீக்கப்பட்டுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவர் நோயாளியின் நம்பிக்கையைப் பெற்று சிகிச்சை அளிப்பதே முக்கியம் என்ற நிலையில், இத்தகைய முறையற்ற தொடர்பும், மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்தியதும் மருத்துவத் துறைக்கு ஏற்பட்ட பெரும் களங்கமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது எட்டு மாத சஸ்பெண்ட் காலம் முடிந்த பிறகு அவர் மீண்டும் பணிக்குத் திரும்புவாரா அல்லது அவரது உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுமா என்பது பெரும் விவாதமாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com