ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட 'ஆக்ஸிடோசின்' ஊசிகளின் ஒரு தொகுதி தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததை அடுத்து, அம்மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை மாநிலம் முழுவதும் அதன் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஆக்ஸிடோசின்' ஊசியானது பிரசவத்தின் போதும் அதற்குப் பின்னரும் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த பெண்களுக்குப் பொதுவாக வழங்கப்படும் ஒரு ஊசி. மேலும் அந்த ஊசி மருந்தில், தேவையான இரத்த உறைவுக் கூறு இல்லை என்பது ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து, அது போலியானது எனக் கண்டறியப்பட்டதாக தற்போது கூறப்பட்டுள்ளது. மேலும், கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில மணி நேரங்களிலேயே கடுமையான உடல்நல குறைபாடு ஏற்பட்டதால், அந்த மருத்துவமனையில் ஐந்து கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் மற்றும் முதற்கட்ட ஆய்வுகளின்படி, சிசேரியன் பிரசவம் செய்துகொண்ட 8 முதல் 12 மணி நேரத்திற்குள், கருவுற்றிருந்த நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டதுடன், சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட, பழுதடைந்ததாகக் கூறப்படும் நரம்பு வழி திரவக் கலவைகளையும் தற்போது புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மரணங்கள் குறித்து ராஜஸ்தான் அரசு உயர் மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதேவேளையில், சிகிச்சைக்கு உதவுவதற்கும், சாத்தியமான காரணங்களை விசாரிப்பதற்கும் ஜெய்ப்பூரில் உள்ள 'எஸ்எம்எஸ்' மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு சிறப்பு நிபுணர் குழு கோட்டாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மரணங்களுக்கான சரியான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும், விசாரணைக் குழு இதுவரை இறுதி முடிவுக்கு வரவில்லை என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஆக்சிடோசின்' ஊசி மருந்தின் மாதிரிகள் சோதனையில் தோல்வியடைந்ததை அடுத்து, கோட்டா மருத்துவமனையில் இருந்த அதன் முழு இருப்பும் பறிமுதல் செய்யப்பட்டதாக ராஜஸ்தான் மருந்து கட்டுப்பாட்டாளர் அஜய் படக் தெரிவித்துள்ளார். தற்போது, ராஜஸ்தான் முழுவதும் அந்த மருந்தின் விற்பனையையும் பயன்பாட்டையும் அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். மேலும், இந்த வழக்குடன் தொடர்புடைய மருத்துவப் பணியாளர்களை, விசாரணை முடியும் வரை மாநில சுகாதாரத் துறை இடைநீக்கம் செய்துள்ளாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 10 நாட்களில் மாநிலம் முழுவதும் விற்கப்பட்ட 11 மருந்துகளின் மாதிரிகள் தரச் சோதனையில் தோல்வியடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்ட ஆய்வுகளின்படி, காய்ச்சல், ஒவ்வாமை, வயிற்று நோய்த்தொற்றுகள், அவசர வலி நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகியவை தரம் குறைந்தவை அல்லது போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களால் இந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.