கனடாவின் நயாகரா பகுதியில் குஜராத்தைச் சேர்ந்த 22 வயது இந்திய மாணவியான விதி கல்பேஷ்பாய் மேகா, போதைப்பொருள் வியாபாரி ஒருவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவருடைய தந்தை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அந்த போதைப்பொருள் வியாபாரி கேட்ட பணத்தைக் கொடுக்க மறுத்ததால் தான் இந்த கொடூரக் கொலை நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த மே 15 அன்று ஸ்டாத் கேத்தரினஸ் பகுதியில் விதி மேகா கொல்லப்பட்ட போதிலும், இந்த அதிர்ச்சித் தகவல் அவருடைய குடும்பத்தினருக்கு 10 நாட்களுக்குப் பிறகுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்-க்கு பேட்டியளித்த விதியின் தந்தை, ஒரு போதைப்பொருள் வியாபாரி தனது மகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறியுள்ளார். ஆனால் விதி அவனுடன் சண்டையிட்டு, பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், விதியை கத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். தனது மகள் இறந்துவிட்டதாகத் தனக்குத் தகவல் வந்ததும், கனடாவில் இருக்கும் உறவினர்களுக்கு அதிகாரப்பூர்வமாக மெயில் அனுப்பி விபரத்தைக் கேட்டறிந்ததாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், தனது மகளின் உடலை இறுதிச் சடங்கிற்காக இந்தியாவிற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் கனடா அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது மகள் விதி கல்பேஷ் மேகா கடந்த 4 ஆண்டுகளாகக் கனடாவில் தங்கிப் படித்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், மகளின் உடலை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத் மாநில அமைச்சரும், போர்சாத் தொகுதி பாஜக எம்எல்ஏ-வுமான ராமன்பாய் சோலங்கி விதியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். விதியின் உடலைத் தாமதமின்றி தாயகம் கொண்டு வர குஜராத் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதமரின் அலுவலகத்துடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
இது குறித்துப் பேசிய அமைச்சர் ராமன்பாய் சோலங்கி, தங்கள் பகுதியைச் சேர்ந்த விதி மேகா கனடாவில் கொல்லப்பட்ட விபரத்தை அறிந்து, உடனடியாக விதியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதாகக் கூறினார். அவர்களது துயரத்தைப் பகிர்ந்து கொண்டதோடு, மகளின் உடலை உடனடியாகக் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையைத் தில்லி மற்றும் மாநில அரசு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
குஜராத்தின் போர்சாத் பகுதியைச் சேர்ந்த விதி மேகா, பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்பதற்காகக் கனடாவுக்குச் சென்று தனது 3 ஆண்டு காலப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். அதன் பிறகு, அவர் அங்குள்ள ஒரு சிறப்புப் படிப்பில் (PSW Honours) சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்த நிலையில், விதியைக் கொலை செய்த 40 வயதான ஜோசுவா செயின்ட் ஓமர் என்ற நபரை கடந்த மே 18 அன்று கனடா நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நயாகரா பிராந்திய போலீஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்