அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த நிகிதா கோடீஷலா என்ற 32 வயது இந்தியப் பெண், தனது முன்னாள் அறை நண்பரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகிதா சில நாட்களாகத் மாயமான நிலையில், அவர் தங்கியிருந்த வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் டிக்கிக்குள் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அர்ஜுன் சர்மா என்ற 32 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயிரிழந்த நிகிதா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகிதாவின் உயிரிழப்பு குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது கண்ணீருடன் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். நிகிதா மற்றும் அர்ஜுன் சர்மா ஆகிய இருவரும் சில காலம் ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும், அப்போது அர்ஜுன் சர்மா நிகிதாவிடமிருந்து சுமார் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களைக் கடனாகப் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்தப் பணத்தைத் திரும்பக் கேட்டதால் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று நிகிதாவின் தந்தை சுரேந்திரா சந்தேகிக்கிறார். கடனாகப் பெற்ற பணத்தை நிகிதா தொடர்ந்து கேட்டு வந்ததால் ஆத்திரமடைந்த அர்ஜுன், அவரைத் திட்டமிட்டுக் கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கொலையைச் செய்த பிறகு, அர்ஜுன் சர்மா தற்கொலை செய்துகொள்ளப் போவதாக நிகிதாவின் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அந்தச் செய்தியில் நிகிதாவைக் கொன்றதை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டதுடன், தானும் வாழப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் நடத்திய தீவிரத் தேடுதலில், நிகிதா உயிரிழந்து கிடப்பதும், அர்ஜுன் சர்மா உயிருடன் பதுங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அர்ஜுன் சர்மா மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிகிதாவின் உடல் இன்னும் அமெரிக்காவிலேயே உள்ள நிலையில், அதனைப் பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் இந்திய அரசின் உதவியை நாடியுள்ளனர். தனது மகளின் உடல் இந்தியா வருவதற்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிகிதாவின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.