
சிங்கப்பூருக்கு விடுமுறைக்காகச் சுற்றுலா சென்றிருந்த இரண்டு இந்திய இளைஞர்கள், இங்குள்ள இரண்டு பாலியல் தொழிலாளர்களை ஹோட்டல் அறைகளில் வைத்து மிரட்டித் தாக்கி, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த செயலுக்காகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளான ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் இராஜேந்திரன் மயிலரசன் (27) ஆகியோருக்குத் தலா ஐந்து ஆண்டுகள் ஒரு மாதச் சிறைத் தண்டனையும் 12 பிரம்படி தண்டனையும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டன. கொள்ளையடிக்கும்போது வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பணத் தேவைக்காகத் தீட்டப்பட்ட திட்டம்
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களின்படி, ஆரோக்கியசாமியும் இராஜேந்திரனும் ஏப்ரல் 24-ஆம் தேதி இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, லிட்டில் இந்தியா பகுதியில் நடந்தபோது, ஒரு அறிமுகமில்லாத நபர் அவர்களை அணுகி, பாலியல் தொழிலாளர்களின் தொடர்பு விவரங்களைக் கொடுத்திருக்கிறார்.
அப்போது, தங்களுக்குப் பணம் தேவைப்படுவதாக ஆரோக்கியசாமி, "அந்தப் பெண்களை ஹோட்டல் அறையில் வரவழைத்துக் கொள்ளையடித்துவிடலாம்" என இராஜேந்திரனிடம் யோசனை தெரிவிக்க, இராஜேந்திரனும் சம்மதித்தார்.
இரண்டு சம்பவங்கள், ஒரே இரவில் அரங்கேறிய கொடூரம்
முதல் கொள்ளைச் சம்பவம்:
அன்றைய தினம் மாலை சுமார் 6 மணியளவில் முதல் பாலியல் தொழிலாளியைச் சந்திக்க ஒரு ஹோட்டல் அறைக்கு ஏற்பாடு செய்தனர். அறைக்குள் சென்றவுடன், அந்த இளைஞர்கள் அந்தப் பெண்ணின் கைகளையும் கால்களையும் துணிகளால் கட்டிப் போட்டு, கன்னத்தில் அறைந்து மிரட்டினர்.
பின்னர், அவரிடமிருந்த நகை, $2,000 சிங்கப்பூர் டாலர் ரொக்கம், அவரது பாஸ்போர்ட் மற்றும் வங்கி அட்டைகள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இரண்டாவது தாக்குதல்:
முதல் சம்பவத்தை முடித்த பிறகு, அதே இரவில் சுமார் 11 மணியளவில், இரண்டாவது பாலியல் தொழிலாளியைச் சந்திக்க வேறொரு ஹோட்டலுக்கு ஏற்பாடு செய்தனர். அந்தப் பெண் வந்தவுடன், இருவரும் அவரின் கைகளைப் பிடித்து அறைக்குள் இழுத்துச் சென்று தாக்கினர். இராஜேந்திரன் அப்பெண் சத்தம் போடாமல் இருக்க, வாயைப் பொத்தியுள்ளார்.
பிறகு அவரிடமிருந்து $800 ரொக்கம், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றைப் பறித்த அவர்கள், "நாங்கள் திரும்பி வரும்வரை அறையை விட்டு வெளியேறக் கூடாது" என மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
மறுநாள் காலையில், இரண்டாவது பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடூரச் செயலை வேறு ஒரு நபரிடம் கூறி, அவர் மூலமாகப் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
கண்ணீர்மல்க மனு
நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான இருவரும், தங்கள் நிலையை எடுத்துக் கூறி தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் மன்றாடினர்.
ஆரோக்கியசாமி, "என் அப்பா போன வருஷம் இறந்துட்டாரு. எனக்கு மூணு தங்கச்சிகள் இருக்காங்க, ஒரு தங்கச்சிக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. எங்ககிட்டப் பணம் இல்ல. அதனாலதான் இப்படிச் செஞ்சுட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
இராஜேந்திரனோ, "என் மனைவியும் குழந்தையும் இந்தியாவில் தனியாகத் தவிக்கிறாங்க. நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இருவருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.