“இன்ஸ்டா டு லிவிங் வாழ்க்கை” - கொலையில் முடிந்த ஆன்லைன் காதல்! 20 வயது இளம்பெண்ணை வலையில் வீழ்த்திய டிரைவர்!

முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, கடந்த சனிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே
Insta-to-living Live-In Relationship
Published on
Updated on
1 min read

பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் 20 வயது இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், அவருடன் லிவிங் டுகெதரில் வசித்து வந்ததாக கூறப்படும் 27 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த இளம்பெண் அனுஷா என்றும், கைது செய்யப்பட்ட நபர் ஷரத் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இவர்கள், கடந்த ஆறு மாதங்களாக பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியில் ஒன்றாக வசித்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, கடந்த சனிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஷரத், அனுஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. ஷரத் பெங்களூருவில் தண்ணீர் டேங்கர் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் வெளியில் தெரியாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் திங்கள்கிழமை ஷரத் தனது வழக்கறிஞரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து வழக்கறிஞர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் சேஷாத்ரிபுரம் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். வீட்டில் இருந்து அனுஷாவின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தேவையான சட்ட நடைமுறைகள் முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஷரத்தைக் கைது செய்தனர். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கான துல்லியமான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய உறவு, இளம்பெண்ணின் உயிரைப் பறித்த சோக சம்பவமாக முடிந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com