சட்டவிதிகளை மீறி வெளிநாட்டு நிதி பெற்ற பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் மீது விசாரணை!!!

சட்டவிதிகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று வருவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிரான புகார் குறித்து விசாரித்து வருவதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பீட்டா, டபிள்யு.வி.எஸ்., ஐ.பி.ஏ.என் ஆகிய விலங்குகள் அமைப்புளுக்கு அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து நிதியை பெறுவதாகவும், கால்நடை ஆராய்ச்சி சம்பந்தமாக நிறுவனங்கள் நடத்தி வருவதாகவும், அதற்கு அரசிடம் உரிய அனுமதியை பெறவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலாளர் முத்துக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதையும், பயன்படுத்துவதையும் கண்காணிக்கும் நடைமுறைகள் உள்ளதாகவும், சட்ட விதிகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பீட்டா உள்ளிட்ட மூன்று அமைப்புகளுக்கு எதிராக மனுதாரர் அளித்த புகாரை, மத்திய பாதுகாப்பு முகமைகளின் ஆலோசனைகளை பெற்று, விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை  நீதிபதிகள்,  இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com