

ஜெய்ப்பூரில் குடும்பத்திற்கு அறிமுகமான ஒருவரை 'கெட்டவர்' என்று ஐந்து வயது சிறுமி கூறியதை அடுத்து, சுமார் 15 நாட்களுக்கு முன்பு அவரால் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை அச்சிறுமியின் குடும்பத்தினர் கண்டறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைதொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் தப்பி ஓடியுள்ளார். பின்னர், ஜெய்சல்மரில் உள்ள ராம்தேவ்ராவில் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமான அந்த குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி புகார் அளித்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் தகவல்படி, சுமார் 15 நாட்களுக்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையைத் தனியாகக் கண்டபோது அச்சிறுமியை பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், இந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் அவ்வாறு வெளியே கூறினால் சிறுமியை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். அதனால் அந்த சிறுமி யாரிடமும் இதுபற்றி கூறவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை சந்திக்கும் சாக்கில் அக்குடும்பத்தினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். தன் பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி அவரைக் கண்டதும், “மாமா கெட்டவர்” என்று கூறியுள்ளார். பாட்டி ஆரம்பத்தில் அக்கருத்தை ஒரு குழந்தையின் அப்பாவித்தனமான அல்லது விளையாட்டுத்தனமாக கருத்து என்று நினைத்து புறக்கணித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அந்த சிறுமி ஏதோ ஒன்றை வெளிப்படுத்தியிருக்கலாம் எனச் சந்தேகமடைந்த குற்றம் சாட்டப்பட்டவர், அந்தக் கருத்து குறித்து சிறுமியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் அந்த சிறுமியின் வீட்டை விட்டுச் சென்ற பிறகு, "தனக்கு என்ன நடந்தது?" என்பது குறித்து அந்த சிறுமி தன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். விஷயமறிந்த அக்குடும்பத்தினர் காவல்துறையை அணுகி இது குறித்து புகாரளித்துள்ளனர். புகாரைப் பற்றி அறிந்ததும் குற்றம் சாட்டப்பட்டவர் தனது வீட்டிலிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. போக்சோ விதிகளின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு காவல் குழு, ஜெய்சல்மர் மாவட்டம் ராம்தேவ்ராவில் குற்றவாளியைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்துள்ளது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்