“அது நல்ல ஸ்கூல் இல்ல” - 11 ஆம் வகுப்பு மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை… அரசிடம் கண்ணீருடன் நீதி கேட்ட தந்தை!

என் மகள் போல வேறு எந்த குழந்தைகளுக்கும் நடக்க கூடாது இதற்கு பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
suicide girl and hostal
suicide girl and hostal
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியினரின் மூத்த மகள், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் வேலை காரணமாக சென்னை கீழ்கட்டளை பகுதியில் வசித்து வந்த நிலையில், மாணவி பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், இன்று காலை சுமார் 6 மணியளவில் மாணவி தனது தாயார் மகாலட்சுமிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, "அம்மா.. அம்மா.. ?" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். அதன்பிறகு விடுதியின் பொறுப்பாளர் போன் செய்து சுமார் 8 மணி அளவில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். 

இதற்கிடையில் மீண்டும் பெற்றோருக்கு போன் செய்த விடுதி நிர்வாகம் மனைவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், உரிய விசாரணை நடத்தி நீதி கிடைக்கும் வரை உடலை உடற்கூறாய்வு செய்ய அனுமதிக்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர். மேலும் மாணவியின் பள்ளி அருகே அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்று, "பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பள்ளி தாளாளரை கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தினர்.

இந்த சாலை மறியல் காரணமாக காஞ்சிபுரம் – உத்தரமேரூர் சாலையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உறவினர்களை தவிர போராட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து மாணவியின் தந்தை கார்த்திக் கூறுகையில், "என் மகளின் மரணத்திற்கு முழுமையான விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும். அது நல்ல ஸ்கூல் கிடையாது.. ஏற்கனவே என் மகள் மூன்று விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளார். நான் தான் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.. என் மகள் போல வேறு எந்த குழந்தைகளுக்கும் நடக்க கூடாது இதற்கு பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட எஸ்பி பள்ளி மற்றும் பள்ளியின் விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டர். மேலும் அடுத்த கட்டமாக பள்ளி மற்றும் விடுதி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதியில் தங்கி பயின்று வந்த 11-ம் வகுப்பு மாணவி, தாயிடம் நலம் விசாரித்து பேசிய சில நிமிடங்களிலேயே தூக்கிட்டு உயிரிழந்த சம்பவமும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவமும் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com