கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 58 வயதுடைய புஷ்பநாதன். இவர் மீன்பிடி தொழிலாளில் செய்து வந்த நிலையில் இவரது மனைவி மேரிகலா உறவினர்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருக்கிறார். எனவே வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த புஷ்பநாதன் சோபாவில் அமர்ந்தபடி டிவி பார்த்து கொண்டிருந்துள்ளார் அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் கத்தியால் புஷ்பநாதன் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். கழுத்தறுப்பட்டு காயமடைந்த புஷ்பநாதன் வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓட முயற்சித்த போதும் விடாமல் துரத்திய அந்த மர்ம நபர் புஷ்பநாதனை விரட்டி விரட்டி முதுகில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.
இந்நிலையில் காயமடைந்த புஷ்பநாதனின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த மர்ம நபரை துரத்தி சென்ற நிலையில் இரத்த வெள்ளத்தில் வீட்டின் எதிரே சாலையில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள் கதறி அழுதபடி புஷ்பநாதன் உடலை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் கொலை செய்து தப்பியோடிய அந்த மர்ம நபரை பொதுமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்து குளச்சல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மர்ம நபர் கொலை செய்யப்பட்ட புஷ்பநாதனின் மனைவியின் தங்கை கணவர் என்பது தெரியவந்தது.
குற்றத்தில் ஈடுபட்டவர் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்த 45 வயது மீன்பிடி தொழிலாளியான ராஜன் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜனை கைது செய்து குளச்சல் காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ராஜனின் மனைவி அவரிடம் சண்டையிட்டு அவரது அக்காவான மேரிகலா வீட்டில் தங்கி இருப்பதாகவும் அதனால் முன்பகை ஏற்பட்டு ராஜன் கொலை செய்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. வீட்டில் தனியாக இருந்த மீனவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.