

கன்னியாகுமரி மாவட்டம், கல்லுக்கூட்டம் அருகே உள்ள நெடுந்தாரவிளை கிராமத்தை சேர்ந்தவர் 58 வயதுடைய ராஜா. கூலி தொழிலாளியான இவர் தனது இரு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில் தனது மனைவியுடன் அதே பகுதியில் உள்ள வீட்டில் தனது மூத்த மகள் ஆக்னஸ் றோசிட்டா மற்றும் அவரது கணவரான மருமகன் சசி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு வீட்டில் ராஜா திடீரென உயிரிழந்த நிலையில் தகவலறிந்து வந்த இளைய மகள் ஏஞ்சலா லின்சி குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்
அதில் தனது தந்தை ராஜா வீட்டில் தனியாக இருந்த போது மாடி படிக்கட்டில் ஏறியதில் தவறி விழுந்து காயமடைந்ததாகவும் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் கொடுத்த தகவலின் படி அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மீண்டும் வீடு திரும்பிய நிலையில் குடிக்க தண்ணீர் கேட்டவர் தண்ணீர் குடிக்கும் போதே பெருமூச்சு விட்டு இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த ராஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜா கடுமையாக தாக்கப்பட்டிருப்பதே அவர் உயிரிழப்பிற்கு காரணம் என தெரியவந்ததால் குளச்சல் போலீஸ் ராஜாவின் மூத்த மகளின் கணவரான சசியை பிடித்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
மது போதைக்கு அடிமையான ராஜா மருமகன் சசியின் உழைப்பில் வாழ்ந்து வந்த போதிலும் சசியிடமும் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தததாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மித மிஞ்சிய போதையில் வந்த ராஜா சசியை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விடாமல் மற்றும் மனைவி சமைத்து கறி விருந்தை கூட சாப்பிட விடாமல் தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாகவும்தொடர்ந்து அடுத்தடுத்த நாள் போதையில் இருந்த ராஜா 27 ஆம் தேதி சனிக்கிழைமை இரவும் தன்னிடம் வம்பிழுத்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த தான் கட்டையால் மாமனார் ராஜா வை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் தலை மற்றும் உடலில் காயமடைந்த ராஜா மயங்கி சரிந்ததால் உயிரிழத்து விட்டதாக எண்ணி வீட்டிலேயே போட்டு பூட்டி விட்டு குடும்பத்துடன் தப்பி சென்று குலசேகரத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்த தாகவும் தெரிவித்தார். மாமனாரை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு மாடிப் படியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய வெல்டிங் தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.