பள்ளி சீருடையில் மது அருந்திய 12-ம் வகுப்பு மாணவிகள்! வைரலான வீடியோவால் அதிர்ச்சி.. தலைமை ஆசிரியைக்கு ஏற்பட்ட சிக்கல்!

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்...
students Alcohol Incident
students Alcohol Incident
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகள், பள்ளி வளாகத்திலேயே மதுபானம் அருந்தியதாக வெளியான வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஜூலை மாதம், இரு மாணவிகளும் பள்ளி சீருடையுடன் மதுபான பாட்டிலை திறந்து, வகுப்பறை வராண்டாவில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை சக மாணவர்கள் சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சிலினிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இரு மாணவிகளையும் அழைத்து தலைமை ஆசிரியை விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, மாணவிகள் பள்ளியில் மது அருந்திய சம்பவத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல், இந்த சம்பவம் தங்களது வீட்டில் நடைபெற்றதாக எழுதி வாங்கி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவிகள் பள்ளி சீருடையில் மது அருந்தும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவின. இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை மாலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் தலைமையிலான பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாணவிகள் மது அருந்தியது பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை வராண்டா என்பது தெரியவந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தை உயர் அதிகாரிகளுக்கு முறையாகத் தெரிவிக்காமல் மறைத்ததாகக் கூறப்படும் பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சிலினை, வடசேரி அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் கூறுகையில், தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் அல்லது போதைப்பொருள் வழங்கியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளியில் போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்றும் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com