கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகர் பகுதியில், இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்த்து பணிக்கு சேர்ந்த கல்லூரி மாணவியை ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படும் பர்னிச்சர் கடை உரிமையாளரை இரணியல் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திங்கள் நகர் பகுதியில் அன்னை வேளாங்கன்னி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் மண்டைக்காடு பாரதி நகரைச் சேர்ந்த 53 வயதுடைய ரிக்சன் மனோ ஜோஸ். இவரது கடையில் வேலை வாய்ப்பு இருப்பதாக இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிடப்பட்ட விளம்பரத்தை பார்த்த அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், கடந்த (ஆக - 29) ஆம் தேதி பகுதி நேர பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், (செப் 2) ஆம் தேதி மாணவி கடைக்கு வேலைக்கு சென்றிருந்தபோது, மதிய நேரத்தில் கடை உரிமையாளர் ரிக்சன் மனோ ஜோஸ் தனது கண்ணுக்கு சொட்டு மருந்து விடுமாறு கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவியை கடையின் உள்பகுதியில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்ற ஜோஸ் கதவை மூடியதாக கூறப்படுகிறது. அங்கு தனது செல்போனில் சில வீடியோக்களை காண்பித்து, அதேபோல் தனக்கு மசாஜ் செய்து தருமாறு மாணவியிடம் வலியுறுத்தி உள்ளார். இதற்கு மாணவி மறுத்த நிலையில், அவரை கட்டாயப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மாணவி சத்தமிட்டு, அவரிடமிருந்து தப்பி வெளியே வந்துள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்த மாணவி, அவர்களின் அறிவுறுத்தலின்படி இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாணவி அளித்த புகாரின் பேரில் ரிக்சன் மனோ ஜோஸ் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரது செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில், ரிக்சன் மனோ ஜோஸ் தனது கடையில் வேலைக்கு வரும் பெண்களை கடையின் உள் பகுதியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று, தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தனது விருப்பத்திற்கு இணங்கும் பெண்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவதாக ஆசை காட்டியதாகவும், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வேலைக்கு வருமாறு கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், பெண்களை வேலைக்கு அழைக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் மூலம் விளம்பரம் செய்து, இளம் பெண்களை பணிக்கு சேர்த்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், புகாரின் அடிப்படையில் ரிக்சன் மனோ ஜோஸால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 4 முன்னாள் பெண் ஊழியர்களையும் போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களும் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தங்களது பொருளாதார சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களையும் எழுத்துப்பூர்வமாக போலீசார் பதிவு செய்த நிலையில் ரிக்சன் மனோ ஜோஸை இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராம் வேலைவாய்ப்பு விளம்பரம் மூலம் பணிக்கு சேர்ந்த கல்லூரி மாணவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படும் சம்பவமும், விசாரணையில் மேலும் பெண்கள் தொடர்பான புகார்கள் வெளியாகியிருப்பதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்