கன்னியாகுமரி மாவட்டத்தில், மழையில் பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல் காரில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன், அருகிலுள்ள மூலச்சல் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி ஒருவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இருவரும் வழக்கமாக ஒன்றாகக் கல்லூரிக்குச் சென்று திரும்புவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை கல்லூரி முடிந்து இருவரும் வீட்டுக்குச் செல்வதற்காகப் பேருந்துக்காகக் கொட்டும் மழையில் காத்திருந்துள்ளனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்த தக்கலை மருந்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர், இருவரையும் ஊருக்குச் செல்ல உதவுவதாகக் கூறி தனது காரில் ஏற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. முதலில், தவெக பெண் நிர்வாகியான மாணவியை மூலச்சல் பகுதியில் இறக்கிவிட்ட கிறிஸ்டோபர், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மாணவியை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது மழை பெய்துகொண்டிருந்த நிலையில், வழியில் திடீரென காரை நிறுத்திய கிறிஸ்டோபர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தமிட்டு, காரிலிருந்து குதித்துத் தப்ப முயன்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, மாணவியிடம் பேசி சமாதானப்படுத்திய கிறிஸ்டோபர், அவரை வீட்டின் முன்பு இறக்கிவிட்டுவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. வீட்டுக்குச் சென்ற மாணவி, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், இதுதொடர்பாகக் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் மீதான விசாரணை தக்கலை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, விசாரணை நடத்திய தக்கலை போலீசார், மாணவியிடம் உதவுவது போல் நடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கிறிஸ்டோபர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள கிறிஸ்டோபரைப் போலீசார் தேடி வருகின்றனர். மழையில் உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அரசியல் கட்சி நிர்வாகி மீது புகார் எழுந்துள்ள சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.