கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், உடல்நலக்குறைவு காரணமாக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கர்ப்பத்துக்கு காரணமானவர் குறித்து மருத்துவர்கள் கேட்டபோது, இளம்பெண் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததுடன், கர்ப்பம் தொடர்பான எந்த விவரத்தையும் தெரிவிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனடியாக இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார், இளம்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த அவர், குழித்துறை பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் விமான பணியாளர் தொடர்பான டிப்ளமோ படித்து வந்ததும், அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் படித்து வந்ததும் தெரியவந்தது. அந்தப் பாடப்பிரிவில் இருவரும் மட்டுமே பயின்றதால், அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாகச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில், அவரது வீட்டிற்கு சென்ற இளம்பெண், சிறுவரை கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தொடர்பு பலமுறை நீடித்த நிலையில், இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார். இருப்பினும், கர்ப்பமான விவரத்தை தனது குடும்பத்தினரிடம் மறைத்து வைத்திருந்ததாகவும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோதுதான் அவர் 8 மாத கர்ப்பிணி என்பது வீட்டாருக்கும் தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, 17 வயது சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் இளம்பெண் மீது போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 8 மாத கர்ப்பிணியாக உள்ள இளம் பெண் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டும், அதனைத் தொடர்ந்து இளம்பெண் கர்ப்பமடைந்த சம்பவமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.