“இளம்பெண் தற்கொலை.. வாலிபர் கொலை” - ஒருதலைக் காதல் விவகாரத்தில் அதிர்ச்சி.. அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்!

இந்த விவகாரம் சுமார் ஓராண்டாக நீடித்த நிலையில், ஏஞ்சலின் பெற்றோர் இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்...
Kanyakumari Double Death Case
Kanyakumari Double Death Case
Published on: 
Updated on: 
2 min read

கன்னியாகுமரி அருகே ஒருதலைக் காதல் தொல்லையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்துக்குக் காரணமானதாகக் குற்றம்சாட்டப்படும் இளைஞரை உறவினர்கள் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரு உயிரிழப்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தை அடுத்த பெரியவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஞானசெல்வம். முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகளான 26 வயதுடைய ஏஞ்சல் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த பொக்லைன் இயந்திர ஆபரேட்டரான 30 வயதான ஆன்டனிராஜ், ஏஞ்சலை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது காதலை ஏஞ்சலிடம் ஆன்டனிராஜ், தெரிவித்த நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆன்டனிராஜ் தன்னைக் காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. அவரது காதலை ஏஞ்சல் ஏற்க மறுத்ததுடன், தொல்லை தாங்க முடியாமல் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர் ஆன்டனிராஜை நேரடியாக அழைத்து கண்டித்துள்ளனர். இருப்பினும், அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சுமார் ஓராண்டாக நீடித்த நிலையில், ஏஞ்சலின் பெற்றோர் இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், சில நாட்களுக்கு முன்பு ஆன்டனிராஜை காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார் அவரை எச்சரித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன்பிறகும் ஆன்டனிராஜ் ஏஞ்சலுக்குத் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. “உன்னால் தான் போலீசார் என்னை எச்சரித்ததாகக்” கூறி, தன்னைக் காதலிக்க வேண்டும் என மீண்டும் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பெற்றோரிடம் மீண்டும் கூறினால் அவர்கள் வருத்தப்படுவார்கள் என ஏஞ்சல் யாரிடமும் சொல்லாமல் மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் ஏஞ்சல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுத நிலையில் ஏஞ்சல் உயிரிழந்த தகவல் அறிந்து ஆன்டனிராஜ் அந்தப் பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஏஞ்சலின் மரணத்தால் ஆத்திரத்திலும் சோகத்திலும் இருந்த குடும்பத்தினரும் உறவினர்களும், ஆன்டனிராஜைப் பார்த்ததும் அவரைத் சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது. அப்போது கையில் கிடைத்த கற்கள் மற்றும் கட்டைகளால் அவரைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த ஆன்டனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலில் அவரது முகத்திலும் உடலின் பல்வேறு பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கன்னியாகுமரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ஆன்டனிராஜின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஏஞ்சலின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஒருதலைக் காதல் தொல்லை தொடர்பான புகாரைத் தொடர்ந்து இளம்பெண் உயிரிழந்ததும், அதையடுத்து இளைஞர் தாக்கிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமும் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com