“யார் கூட போய்ட்டு வர” - சந்தேகத்தின் உச்சத்தில் கணவன்.. தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை!

இதில் தலையில் பலத்த காயமடைந்த பவிலா, ரத்தம் வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்...
Tiruppur Wife Murder Case
Tiruppur Wife Murder Case
Published on: 
Updated on: 
1 min read

திருப்பூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கணவரைக் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பவிலா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

குடும்ப சூழ்நிலைக்காக இருவரும் திருப்பூர் மாவட்டம், பலவஞ்சிபாளையம் திருக்குமரன் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததுடன், கட்டிடத் தொழிலாளர்களாகவும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், மனைவி பவிலாவின் நடத்தையில் கிறிஸ்டோபருக்குச் சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் பவிலாவிடம் “யார் கூட போய்ட்டு வர” என அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

வழக்கம் போல நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணவன் மனைவி இடையே மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்திருக்கின்றனர். பின்னர் அனைவரும் தூங்க சென்ற நிலையில் ஆத்திரம் அடங்காத கிறிஸ்டோபர் பவிலா தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பவிலா, ரத்தம் வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்த வீரபாண்டி காவல் நிலைய போலீசார், அங்கு சென்று பவிலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் கிறிஸ்டோபரைக் கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கணவர் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com