

காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டி குமார். பொறியில் பட்டதாரியான அவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். மேலும் அந்நாட்டின் குடியுரிமையும் பெற்றுள்ளார். இவரது மனைவி காரைக்குடி அருகே அரியக்குடியை சேர்ந்த மகேஸ்வரி (வயது 38). இவர்களுக்கு தர்ஷிகா, கிருத்திகா என்ற இரண்டு மகள்கள்உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார். இளைய மகள் காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். மகேஸ்வரி காரைக்குடி மருதுபாண்டியர் நகரில் வசித்து வருகின்றார். மகேஸ்வரி கணவர் அனுப்பும் பணத்தில், அவ்வப்போது இடங்களை வாங்கி, விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் காரைக்குடி ஆவுடை பொய்கை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தைல மரக்காட்டில் ரத்த வெள்ளத்தில், காரின் முன்பக்க சீட்டில் மகேஸ்வரி ரத்த இறந்து கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த 20 பவுன் நகையும் மாயமாகியிருந்தது. இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிந்து காரை கைப்பற்றி, மகேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தேவகோட்டை டி.எஸ்.பி., (பொறுப்பு) கவுதம் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். கொலை நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
கொலை செய்யப்பட்ட இடத்தில் மகேஸ்வரியின் அலைபேசி, மற்றும் மற்றொரு அலைபேசியையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மகேஸ்வரி மொபைலில் இருந்து நேற்று 1 மணிக்கு மேல் காரைக்குடியை சேர்ந்த செந்தில் என்ற நபருக்கு லொகேஷன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்குடி அரியக்குடி லட்சுமி நகரை சேர்ந்த சசி என்ற சசிக்குமாரை (வயது 32) போலீசார் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன.
சசிக்குமார் மகேஸ்வரியின் ஆக்டிங் டிரைவராக இருந்துள்ளார். மேலும் அவ்வப்போது மகேஸ்வரிக்கு கார் ஒட்டவும் சொல்லிக்கொடுத்துள்ளார். மேலும் சசிகுமாருக்கு மகேஸ்வரி பணம் கொடுத்துள்ளதாகவும் இதை திருப்பி கேட்டதில் ஏற்கனவே இவர்களிருவருக்கும் முன் விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆவுடைபொய்கை பகுதியில் ஒரு இடம் உள்ளது, எனக் கூறி மகேஸ்வரியை சசிக்குமார் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து காரின் கதவால் அடித்து, கழுத்தை நெரித்து மகேஸ்வரியை கொலை செய்து நகைகளை திருடியுள்ளார். அந்த நகையில் ஒரு நகையை காரைக்குடியில் உள்ள தனியார் அடகு கடையில் அடகு வைத்துள்ளார். மேலும் மகேஸ்வரியின் மொபைலில் இருந்து செந்திலுக்கு லொகேஷன் அனுப்பியுள்ளார். செந்திலை கொலை வழக்கில் சிக்க வைக்க இந்த வேலையை அவர் செய்துள்ளார். சி.சி.டி.வி, காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அரியக்குடி லெட்சுமிபுரம் பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த சசிக்குமாரை கைது செய்தனர்.
காரைக்குடியில் கடந்த 27-ஆம் தேதி பொன் நகர் பகுதியில் பாஜக பிரமுகரும் பொறியாளருமான பழனியப்பன் கட்டடப் பணியில் பார்வையிட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த கூலிப்படையினர் அவரை வெட்டி கொலை செய்தனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த கொலை நடந்திருப்பது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இளம் பெண் காட்டுப்பகுதியில் காரில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.