“புதைத்த தாயின் சடலத்தை நள்ளிரவில் தோண்டி எடுத்த மகன்கள்” - பைக்கில் கடத்திய அதிர்ச்சி.. ஆதாரங்களை அழிக்க முயற்சியா?

சந்தேகத்திற்கிடமான வகையில் மூட்டையுடன் சென்ற இருவரையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்...
suspected sons
suspected sons
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், தாயின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், புதைக்கப்பட்ட அவரது சடலத்தை இரு மகன்களே நள்ளிரவில் தோண்டி எடுத்து மோட்டார் சைக்கிளில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாவணகெரே மாவட்டம் மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 58 வயதுடைய ஈரம்மா இவர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்ததால், போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உடற்கூறாய்வுக்குப் பிறகு, ஈரம்மாவின் உடல் அவரது மகன் மஞ்சுநாத்திடம் ஒப்படைக்கப்பட்டு, குடும்பத்தினரின் சொந்த விவசாய நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 18-ஆம் தேதி நள்ளிரவில், ஈரம்மாவின் மகன்களான மஞ்சுநாத் மற்றும் அவரது சகோதரர் வெங்கடேஷா ஆகியோர், அதிகாரிகளின் எந்த அனுமதியும் இன்றி தாயின் சடலத்தை புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுத்துள்ளனர். பின்னர், அந்த சடலத்தை ஒரு மூட்டையில் கட்டி இரு சக்கர வாகனத்தில் ஏற்றி, தாவணகெரே நகரை நோக்கி ரகசியமாக எடுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான வகையில் மூட்டையுடன் சென்ற இருவரையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

எனவே அவர்கள் புதைத்த தாயின் சடலத்தை மீண்டும் தோண்டி முட்டையில் இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் உடனடியாக பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர். பின்னர், சடலத்தை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். ஈரம்மாவின் மரணம் தொடர்பான வழக்கில் இருந்து தப்பிக்கவும், விசாரணைக்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்திலுமே சடலத்தை அகற்ற முயற்சித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலர் சாந்தராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், இரு சகோதரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைக்கப்பட்டு சடலத்தை தோண்டி எடுத்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. புதைக்கப்பட்ட தாயின் சடலத்தை மகன்களே நள்ளிரவில் தோண்டி எடுத்து மோட்டார் சைக்கிளில் கடத்த முயன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com