திருமணமான இரண்டே மாதத்தில் காதலனுடன் எஸ்கேப்.. கணவனும் பலி.. கல்யாணம் செய்து வைத்த தரகரும் தற்கொலை!

இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், தனது மனைவி காதலனுடன் சென்றதை...
திருமணமான இரண்டே மாதத்தில் காதலனுடன் எஸ்கேப்.. கணவனும் பலி.. கல்யாணம் செய்து வைத்த தரகரும் தற்கொலை!
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் ஒட்டுமொத்த ஊரையும் உலுக்கிய ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஹரிஷ் என்பவருக்கும் சரஸ்வதி என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் நடைபெற்றது. ஆனால், இன்று ஹரிஷ் பிணமாகவும், சரஸ்வதி தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சிறையிலும் இருக்கும் கொடூரமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த தரகரும் தற்போது உயிருடன் இல்லை என்பதுதான் இந்தச் சம்பவத்தின் உச்சக்கட்ட சோகம்.

கடந்த ஜனவரி 23-ஆம் தேதி, கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், சரஸ்வதி மாயமாகவில்லை என்பதும், அவர் தனது முன்னாள் காதலன் சிவகுமாருடன் ஓட்டம் பிடித்திருப்பதும் தெரியவந்தது. இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், தனது மனைவி காதலனுடன் சென்றதை அறிந்த கணவர் ஹரிஷ் மிகுந்த மனவேதனை அடைந்தார்.

தனது வாழ்க்கையே சீரழிந்துவிட்டதாகக் கருதிய 30 வயதான ஹரிஷ், தனது மரணத்திற்கு யார் காரணம் என்பதை ஒரு கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் துயரச் செய்தி ஹரிஷின் குடும்பத்தை நிலைகுலையச் செய்தது. இதற்கிடையில், இந்தத் திருமணத்தை மிக ஆர்வமாக முன்னின்று நடத்தி வைத்தவரும், சரஸ்வதியின் மாமாவுமான 36 வயது ருத்ரேஷ் என்பவரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். தான் ஆசை ஆசையாகச் சேர்த்து வைத்த வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற குற்ற உணர்ச்சியில் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சரஸ்வதிக்குத் திருமணத்திற்கு முன்பே ஒருவருடன் காதல் உறவு இருந்திருக்கிறது. இந்த விஷயம் ஹரிஷிற்குத் தெரிந்திருந்தும், சரஸ்வதியின் குடும்பத்தினரைச் சம்மதிக்க வைத்து அவர் சரஸ்வதியைத் திருமணம் செய்துள்ளார். ஒருவேளை திருமணத்திற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று அவர் நம்பியிருக்கலாம். ஆனால், அந்த நம்பிக்கை இன்று இரண்டு குடும்பங்களின் நிம்மதியையும் குலைத்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தாவணகெரே காவல்துறை கண்காணிப்பாளர் உமா பிரசாந்த் கூறுகையில், "தாவணகெரே ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உணர்ச்சி ரீதியான அழுத்தத்தால் இரண்டு பேர் தற்கொலை செய்துள்ளனர். இரு தரப்பிலிருந்தும் புகார்கள் பெறப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். தற்போது சரஸ்வதி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com