“மூன்றாம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறிய ஆசிரியர்” - வகுப்பறையில் மது போதையில் செய்த அட்டூழியம்… தலைமையாசிரியரும் உடந்தையா?

வகுப்பறையில் மாணவர்களை போதையில் தகாத வார்த்தைகளால் திட்டி...
 “மூன்றாம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறிய ஆசிரியர்” - வகுப்பறையில் மது போதையில் செய்த அட்டூழியம்… தலைமையாசிரியரும் உடந்தையா?
Published on
Updated on
2 min read

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் வரவணை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பாடம் எடுக்கும் ஆசிரியராக 53 வயதுடைய முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி வேளையில் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது, பள்ளி வகுப்பறையிலேயே அமர்ந்து சிகரெட் புகைப்பது என ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும் வகுப்பறையில் மாணவர்களை போதையில் தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் முருகன் அவர் பாடம் எடுக்கும் வகுப்பில் உள்ள சிறுமிகளிடம் பாலியல் ரீதியாகவும் அத்துமீறி வந்திருக்கிறார். சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இதனை வீட்டில் தெரிவித்தால் அடுத்த வகுப்பு செல்ல பாஸ் செய்ய மாட்டேன் எனவும் கூறி மிரட்டியிருக்கிறார். இதனால் சிறுமிகள் ஆசிரியர் குறித்து வெளியில் தெரிவிக்காமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் வகுப்பறையிலேயே மூன்றாம் வகுப்பு சிறுமியிடம் அநாகரிக செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனை அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு தலைமையாசிரியர் எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் என அலட்சியமாக பதிலளித்துவிட்டு சென்றுள்ளனர். இதனை சிறுமியின் பெற்றோர்கள் ஊரில் உள்ள பெரியவர்களிடம் ஆலோசனை செய்த போது அந்த ஆசிரியர் இது போல ஊரில் பல சிறுமிகளிடம் அத்து மீறியது தெரியவந்தது. எனவே நேற்று காலையில் பெற்றோர்கள், கிராம முக்கியஸ்தர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

Admin

அப்போது பள்ளி தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் முருகனுக்கு ஆதரவாகவும் உண்மையை மறைத்து பேசியுள்ளனர். இதனால் ஆசிரியர் முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்ற ஆசிரியர்கள், மற்றும் தலைமை ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், கிராம முக்கியஸ்தர்கள் தரகம்பட்டி கரூர் நெடுஞ்சாலையில் வரவணை பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜீ, அகுழந்தை பாதுகாப்பு துறை அலுவலர் மீனா, கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசந்திரன், சிந்தாமணி மற்றும் எஸ்ஐ தங்கசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், பெற்றோர்களிடமும் உரிய விசாரணை மேற்கொண்டு பள்ளி ஆசிரியர் முருகன் மீதும் அவருக்கு உடந்தையாக இருக்கும் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுப்பதாகவும், ஆசிரியர் முருகனை பணியிட மாற்றம் செய்து அவரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகும் உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com