சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில், மயானம் அருகே இளைஞர் ஒருவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் மீது ஏற்கெனவே கொலை மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கேளம்பாக்கம் கே.எஸ்.எஸ். நகர் அருகே உள்ள மயானப் பகுதியில் இன்று காலை சுமார் 7 மணியளவில், இயற்கை உபாதை கழிக்கச் சென்ற சிலர், இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் கேளம்பாக்கம் அண்ணா நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஷாகுல் அமீது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கேளம்பாக்கம் உதவி ஆணையர் ஜான் விக்டர் மற்றும் காவல் ஆய்வாளர் தமிழன்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் ஷாகுல் அமீதுடன் கடைசியாக இருந்தவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஷாகுல் அமீது மீது ஏற்கெனவே 2020-ம் ஆண்டு கொலை வழக்கு இருப்பதும், 2026-ம் ஆண்டு கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த (ஆக 27) ஆம் தேதி அவர் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் ஷாகுல் அமீது தனது நண்பர்களுடன் மயானப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்ததை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் இரவு நேரத்தில் அவருடன் இருந்தவர்கள் அல்லது வேறு நபர்கள் அவரை தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, ஷாகுல் அமீதுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, கேளம்பாக்கம் பகுதியில் யார் பெரியவர் என்பதை காட்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு இருதரப்பினரும் போட்டி போட்டு வந்ததாகவும், இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ஷாகுல் அமீதுக்கும் எதிர்தரப்பைச் சேர்ந்த அப்துல், அருண் மற்றும் கொளத்தூர் ஜெய் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது ஷாகுல் அமீது கத்தியால் வெட்டப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த மூவரும் ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த (ஆக 26) ஆம் தேதி ஷாகுல் அமீதின் பிறந்தநாளன்று அவரை கொலை செய்வதாக எதிர்தரப்பினர் மிரட்டியதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் கஞ்சா வழக்கில் ஷாகுல் அமீது சிறையில் இருந்ததால் அவரை கொலை செய்ய முடியாமல் போனதாகவும், கடந்த 27-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்ததைத் தொடர்ந்து திட்டமிட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
எனினும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன, சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர், ஷாகுல் அமீதுடன் நேற்று மாலை இருந்தவர்கள் யார், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கேளம்பாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்