“தலையில் மிதித்து கொல்லப்பட்ட ஏசி மெக்கானிக்” - டீ கடையில் ஏற்பட்ட தகராறில் அதிர்ச்சி சம்பவம்… நடுத்தெருவில் நடந்த கொடூர தாக்குதல்!

மது போதையில் இருந்த அந்த இளைஞர் விக்னேஷ் சட்டையை பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார்.
vinoth
vinoth
Published on
Updated on
2 min read

சென்னை வடபழனி ஈஸ்வர் நகர் 4 வது தெருவை சேர்ந்தவர் 24 வயதுடைய நந்தகுமார் என்ற வினோத் . இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து விட்டு ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த (ஜூன் 18) ஆம் தேதி இரவு வினோத் தனது நண்பர்களான கோடம்பாக்கம் காமராஜ் காலனி பகுதியை சேர்ந்த தனியார் உணவு டெலிவரி ஊழியர் விக்னேஷ்(23) , நரேந்தர்(24 ) ஆகியோருடன் மது போதையில் கோடம்பாக்கம் யுனைடெட் காலனி 4வது மெயின் ரோடு பகுதியில் உள்ள டீ கடையில் சிகரெட் வாங்க சென்றுள்ளார்.

விக்னேஷ் கடையில் சிகரெட் வாங்கி விட்டு வரும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அடையாளம் தெரியாத இளைஞர் மீது மோதியதாக தெரிகிறது. உடனே மது போதையில் இருந்த அந்த இளைஞர் விக்னேஷ் சட்டையை பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த வினோத் ஓடிச்சென்று இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயன்றுள்ளார் அப்போது அந்த இளைஞர் மற்றும் அவருடன் இருந்த 5 பேர் சேர்ந்து வினோத் மற்றும் விக்னேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் வினோத்தை அடித்து உதைத்து கீழே தள்ளி தலையில் கால் வைத்து மிதித்தனர்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வினோத் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட இருவரையும் உடன் சென்றிருந்த நண்பர் நரேந்திரன் தனது நண்பர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் வினோத்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மேலும் காயமடைந்த விக்னேஷ் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து விக்னேஷ் கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று இந்த தாக்குதல் சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணை சம்பவத்தன்று விக்னேஷ், நந்தகுமார் @ வினோத், நரேந்திரன் ஆகிய டீ கடைக்கு சென்று சிகரெட் வாங்கி விட்டு வரும்போது கோடம்பாக்கம் பரதீஸ்வரர் காலனியில் வசிக்கும் ஆகாஷ்(26) மீது மோதியதால் ஆத்திரமடைந்த ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களான பிரின்ஸ் வில்லியம் (26), சினிமா உதவி இயக்குநர் விஷால் (27), மற்றும் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையரின் மகன்கள் மார்ஷல் (30), நிதிஷ்(26) ஆகிய ஐந்து பேர் சேர்ந்து விக்னேஷ் மற்றும் வினோத்தை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையரின் மகன்கள் மார்ஷல், நிதீஷ், சினிமா உதவி இயக்குநர் விஷால், ஆகாஷ், பிரின்ஸ் வில்லியம்ஸ் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏசி மெக்கானிக் வினோத் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.‌ இதனை அடுத்து கோடம்பாக்கம் போலீசார் இந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com